கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,
பிரதமர் பதவியில் இருந்தும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்தும் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதுடன் அதற்கான கையெழுத்தையும் சேகரித்து வருகின்றனர்.
எனினும் அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் இலங்கை தமிழரசுக் கட்சி கையெழுத்திடாது என தெரிவித்துள்ளார்.
ஹரிணி அமரசூரிய பெண் பிரதமர் என்ற அடிப்படையிலும், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சரியான ஆதாரங்களை எவரும் வௌியிடாமை ஆகிய காரணங்களுக்காக அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எமது கட்சியினர் கையெழுத்திடவில்லை என தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய அந்த கற்றல் தொகுதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காக அவரை பதவி நீங்கக் கோருவதை ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே தமது கட்சி கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் கட்சியின் தலைமையுடன் கலந்துரையாடியுள்ளோம்.
எனவே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டாலும் அந்த பிரேரணைக்கு ஆதரவாகவும், பிரதமருக்கு எதிராகவும் எமது கட்சி வாக்களிப்பதில் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு புதிய கல்வி சீர்த்திருத்தம் ஒன்று அவசியமானதாகும். உலக நாடுகளில் ஆரம்ப கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் இலங்கையில் இல்லை.
இலங்கையில் ஆரம்பக் கல்வி பின்னடைவாகவே உள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாளுவதில் அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.
எனினும் தனிப்பட்ட ரீதியில் பெண் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுகளில் நாம் பங்காளிகளாக மாற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
