கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட 44kW திறன் கொண்ட சோலார் மின்சார திட்டத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13) காலை 11.30 மணிக்கு பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பள்ளிவாசலின் மின்சார செலவினங்களை குறைத்து, பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் இம்முக்கியமான திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி வழங்கிய கெளரவ முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் விஷேட அதிதியாக கலந்துகொண்டார்.
மேலும் திட்டத்தின் செயலாக்கத்திற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் அக்கறையுடன் ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை பிரதேச செயலாளர் அஷ் ஷேக் டி. எம். எம். அன்ஸார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் முஹம்மது ஜெளபர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் முஹம்மது ஷபீக் மற்றும் தரநிலைக்கு ஏற்ப பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றிய ஒப்பந்தக்காரர் சகோதரர் முஹம்மது அன்வர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவேற்றத்துக்காக பங்களிப்பு நல்கிய அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையாளர் சபையின் மனப்பூர்வமான நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் உரையாற்றும் போது அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து முன்கொண்டு செல்லும் நம்பிக்கையாளர் சபையின் போக்கினை வரவேற்றதோடு எதிர்காலத்தில் பள்ளிவாசலினால் முன்னெடுக்கப்படும் சமூக நல வேலைத்திட்டங்களில் தன்னாளான முழு பங்களிப்பையும் வழங்குவதாகவும் உத்தரவாதம் வழங்கினார்.
ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து ஜமாஅத்தார்கள் சகிதம் சோலார் மின்சார தொகுதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச். எம். எம். ஹரீஸ், நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் மற்றும் பொருளாலர் எஸ். எம். ரிப்னாஸ் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
நிகழ்வில் இறுதியாக கண்ணியத்துக்குரிய பேஷ் இமாம் மெளலவி ஜப்றான் கெளஸீ அவர்களின் விஷேட துஆ பிரார்த்தனையோடு நிகழ்வு நிறைவுபெற்றது.
இந்த சோலார் மின்சார திட்டம், பள்ளிவாசலின் பரிபாலன செலவினங்களை நீண்டகால அடிப்படையில் குறைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேண்தகு வளர்ச்சிக்கான ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் அமையும்.