உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, ஆலங்குடாவில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஆலங்குடா கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (18) இரவு இருவரால் தாக்கப்பட்டு, புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வியாழக்கிழமை (18) இரவு ஆலங்குடா கிராம சேவகர் பிரிவில் விநியோகித்துக் கொண்டிருந்த போதே, அங்கு கடமைபுரிந்துகொண்டிருந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆலங்குடா கிராம சேவகர் பிரிவிலுள்ள அனர்த்த முகாமைத்துவ குழுவினால் தயாரிக்கப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாத பெண்ணொருவர் அங்கு வருகை தந்து தனது வீடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த உலர் உணவுப் பொதியை தனக்கும் வழங்குமாறு கேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதன்போது, குறித்த பெண்ணிடம் வெள்ள பாதிப்பு தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு பின்னர், உலர் உணவுப்பொதியும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்ட இடத்திற்கு இரவு 10 மணியளவில் வருகை தந்த இருவர், அங்கு கடமையில் இருந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என சொல்லப்படுகிறது.

உலர் உணவுப் பொதிகளை பெறுவதற்காக வருகை தந்த குறித்த பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் விசாரணை செய்து அவமானப்படுத்தி விட்டார் என்ற அடிப்படையில் அத்துமீறி உள்ளே நுழைந்த இருவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அவரை கடுமையாகவும் தாக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும், சந்தேக நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளான ஆலங்குடா கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-ரஸீன் ரஸ்மின்

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழப்பு (UPDATE)

பதுளையில் பாரிய தீ விபத்து!

மியன்மாரில் நடந்த நிலநடுக்கத்திற்கு சஜித் பிரேமதாச கவலை தெரிவிப்பு

editor