கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும், அனுமதிப்பத்திரம் இல்லாத போர 12 ரக 3 துப்பாக்கிகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்ததாகவும் தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.எம்.எம். சந்திரசிறி தெரிவித்தார்.
நேற்று (25) கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் உள்ளிட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, வஹகோட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் மான்களை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது.
இவர்களில் ஒருவரின் சகோதரர் பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரியவந்துள்ளது.
மானைக் கொன்ற பிறகு அதை கொண்டு செல்வதற்காகவும், பிரதேச மக்கள் சம்பவத்தைக் கண்டதன் காரணமாகவும் சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரான பொலிஸ் சார்ஜனின் உதவியை கோரியுள்ளனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றொரு சார்ஜனின் உதவியை நாடி, தனது சகோதரரால் சுடப்பட்ட மான் இருக்கும் இடத்திற்கு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நால்வரும் கிரானேகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படும் நிலைமை காணப்பட்டதால், அவர்கள் இன்று (26) அதிகாலையில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இதேவேளை, பிரதேச மக்களால் தாக்கப்பட்டதாகக் கூறி மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் ஜீப் வாகனத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் மான் போர 12 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் வனப்பகுதியில் உள்ள ஒரு மானை சுட்டுக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று (26) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.