உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி

கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை கொரொதொட்ட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் டுபாயிலிருந்து இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹெயியன்தொடுவ பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஆவார்.

2024 ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை, கொரொதொட்ட பகுதியில் 34 வயது நபர் ஒருவரை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருந்தனர்.

இந்தக் குற்றம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, குற்றச்செயலை மேற்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தவர் மற்றும் ரிவொல்வர் ஒன்று இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், துப்பாக்கிதாரி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்தது.

அந்த சந்தேக நபர் இலங்கைக்கு வரும்போது கைது செய்யப்பட வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts

தபால் திணைக்களத்தின் உள்ளகப் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

editor

சந்தேக நபர்கள் 6 பேரும் விளக்கமறியலில்