அரசியல்உள்நாடு

கட்சியை ஒன்றிணைக்க உதவுமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு தலைமை தாங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

தலைமைப் பதவியை ஏற்க விருப்பமில்லை என்றால், அதை ஏற்காமல் இருந்தாலும், கட்சியை ஒன்றிணைப்பதற்கான திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அமைப்பாளர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தடவைகள் இந்தக் கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதியிடம் அமைப்பாளர்கள் முன்வைத்துள்ளனர்.

“நாம் ஸ்ரீ லங்கா” என்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த மற்றொரு அமைப்பும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கோரிக்கைக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் இது குறித்து கவனம் செலுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது பல நெருக்கடிகள் எழுந்துள்ளன. பல தரப்பினரால் எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் கட்சியின் அரசியல் நிலைமை சிக்கலானதாக உள்ளது.

ஆனால், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தொடுத்திருந்த நீதிமன்ற வழக்குகளிலிருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளனர்.

எனினும், துமிந்த திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர ஆகிய கட்சி உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி “நாற்காலி” சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

தேர்தலுக்குப் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் புனரமைப்பு செய்யப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஒருபக்கம் ஊழியர்களின் சத்தியாகிரக போராட்டம்! மறுபுறம் நியாயம் கோரி பேரணி!!

சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் தொண்டமான் எம்.பி பங்கேற்பு

editor

கப்ராலுக்கு அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழு அழைப்பு