இலங்கையின் கடற்கரைகளுக்கு எந்தவொரு ஹோட்டல்களோ அல்லது தனிநபர்களோ உரிமை கோர முடியாது என்று கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார, ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தமது கரையோர பகுதியை பராமரிக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு என்று கூறினார்.
ஆனால், இவ்வாறு பராமரிப்பதால் அந்தப் பகுதியை தனியார் கடற்கரை என உரிமை கோரி, உள்ளூர்வாசிகள் அல்லது பொது மக்கள் அந்தப் பகுதியை பயன்படுத்துவதை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
“பாதுகாப்பு அமைச்சு அல்லது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தால் ஒரு பகுதி ஒதுக்கப்படாவிட்டால், எந்தவொரு நபரும் அந்த கடற்கரைப் பகுதிக்கு செல்லலாம்.
எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ அதை தங்களுக்குச் சொந்தமானது என்று கோர முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.