வகைப்படுத்தப்படாத

ஐ.நா.சபையின் இளைஞர் அலுவல்கள் இலங்கைத் தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் என்டோனியோ குற்றேரஸ் தனது இளைஞர் அலுவல்கள் தூதுவராக நியமித்துள்ள இலங்கையைச் சேர்ந்த திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் நற்பெயரை உலகம் முழுவதும் அறியச்செய்து திருமதி ஜயத்மா விக்கிரமநாயக்க தாய்நாட்டிற்கு பெற்றுக்கொடுத்த கௌரவத்தினை ஜனாதிபதி பாராட்டினார்.

அவருக்கு தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி தெரிவித்ததுடன், இலங்கையின் இளைய தலைமுறையினருக்காகவும் உலகவாழ் இளைய தலைமுறையினருக்காகவும் அவர் பாரிய சேவை ஆற்றக்கூடிய வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

தனது 21வது வயதில் பூகோள இளைஞர் அபிவிருத்தி செயற்திட்டத்தில் அங்கம்வகித்த ஜயத்மா விக்கிரமநாயக்க உலக இளைஞர் திறன்கள் தினத்தை பிரகடனப்படுத்தல் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட செயற்திட்டங்கள் பலவற்றில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இளைஞர் அபிவிருத்திக்காக தேசிய மட்டத்தில் அவரால் ஆற்றப்பட்ட முதன்மையான பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரால் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அளுத்கம சங்கமித்தா மகளிர் கல்லூரியினதும், கொழும்பு விசாக்கா கல்லூரியினதும் பழைய மாணவியான 27 வயதுடைய ஜயத்மா கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமானி பட்டதாரியாவார். மேலும் அவர் அப்பல்கலைக்கழகத்திலேயே அபிவிருத்தி கற்கைகள் தொடர்பான பட்டப்பின் படிப்பையும் தொடர்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“Singapore had set an example of the need for pragmatic  thinking” – Champika Ranawaka

Two Chinese arrested for credit card forgery

ஹெரோயினுடன் இளைஞர் கைது