ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 இலட்சம் ரூபாவும், அவளது தாய்க்கு 10 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த இழப்பீடு செலுத்தப்படாவிட்டால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
2015 ஜூலை 3ஆம் திகதி, அப்போது 53 வயதாக இருந்த இந்தக் குற்றவாளி, ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தீர்ப்பை வெளியிடும் போது, நீதிபதி நவரத்ன மாரசிங்க, குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றவர் எனவும், குற்றம் நடந்த நாளில் சிறுமியின் தாய் கர்ப்பிணியாக இருந்ததால், அவளது தந்தையுடன் வைத்தியசாலைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
இதனால், பாடசாலையில் இருந்து சிறுமியை அழைத்து வர முடியாத நிலையில், பெற்றோர் நன்கு அறிமுகமான இந்தக் குற்றவாளியை பாடசாலையில் இருந்து சிறுமியை அழைத்து வருமாறு கேட்டிருந்தனர்.
அதன்படி, முச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற குற்றவாளி, சிறுமியை தனது வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பதாகவும், அங்கு விளையாடலாம் என்றும் கூறி ஏமாற்றி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமி அந்த வீட்டிற்கு சென்றபோது, அங்கு சிறு குழந்தைகள் இல்லாத நிலையில், குற்றவாளி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, பின்னர் அவரை மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.
பின்னர், வீட்டில் சிறுமியின் அசாதாரண நடத்தை குறித்து விசாரித்தபோது, குற்றவாளி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததாக நீதிபதி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து கிரேண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபை சிறுமியிடமிருந்து வீடியோ சாட்சியங்களை பதிவு செய்ததாகவும் நீதிபதி தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்தபோது, முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதாகவும், அதன்படி குற்றவாளியை இரு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக்குவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன், அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குற்றவாளி ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது ஐந்து பிள்ளைகளும் பெண் குழந்தைகள் எனவும் கூறினார்.
இவ்வாறு பெண் குழந்தைகளை கொண்ட ஒரு தந்தை இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் செய்தது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவருக்கு சட்டத்தால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார்.
குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குற்றவாளி 62 வயதுடையவர் எனவும், கடந்த ஏழு ஆண்டுகளாக காசநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
அவரது இளைய மகள் 14 வயதுடையவர் எனவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு லேசான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதி இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதவாறு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளியின் குற்றத்தின் தன்மையை பரிசீலிக்கையில், குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது என சுட்டிக்காட்டினார்.
ஐந்து பெண் குழந்தைகளின் தந்தையாக இருந்தும், பெண் குழந்தைகளின் மதிப்பை உணர்ந்திருக்க வேண்டிய குற்றவாளி, ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது கடுமையான குற்றம் என நீதிபதி குறிப்பிட்டார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சமூகத்தில் வலுவான குரல் எழுப்பப்படும் இந்த காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்களை சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எனவே குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது எனவும் கூறி, இந்த தண்டனையை நீதிபதி அறிவித்தார்