அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சியின் வாயை மூடச் செய்யும் நடவடிக்கைகள் நன்றாகவே முன்னெடுக்கப்படுகின்றன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போது, ​​பாராளுமன்றத்தில் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

மக்களின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டப்படும்போது, ​​ஒலிவாங்கியைத் துண்டிக்கும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக, நானும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சக உறுப்பினர்களும் தனிப்பட்ட விடயங்களை வெளிப்படுத்துவதை விடுத்து, மக்கள் பிரச்சினைகளை முன்வைப்பதற்காகவே எழுந்து நிற்கிறோம்.

இவ்வாறு மக்கள் பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பங்களில் அதைத் தடுப்பது, கருத்துகளை வெளியிடுவதற்கு தடங்கல் ஏற்படுத்துவது கீழ்த்தரமானதும் இழிவான செயலாகும்.

ஒலிவாங்கிகளை துண்டிப்பதையோ அல்லது விவாதத்தை சீர்குலைப்பதையோ விடுத்து எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து நடைமுறை ரீதியான பதில்களை பெற்றுக் கொடுக்கும் பணியையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

தீர்வுகளை வழங்கும் யுகத்துக்கு மாறாக எதிர்க்கட்சியின் குரலை அடக்கும், பொய்யான கதைகளை முன்வைக்கும் யுகமே தற்சமயம் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையின் கீழ், அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி மற்றும் கெபித்திகொல்லாவ பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய இன்று (15) மதவாச்சிய பிரதேசத்திற்கு விஜயம் செய்தபோதே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறு பிரச்சினைகளை நாம் முன்வைப்பது அரசியல் நாடகமல்ல, மாறாக மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைப்பதும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதுமாகும். 2020 முதலே நாம் இவ்வாறு பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வருகிறோம்.

ஆகவே இது ஓர் அரசியல் நாடகமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு நாடகங்களுக்கு மக்கள் சிக்கிக் கொண்டாலும், எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நாடகங்களை நடத்தாது மக்களினது பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்கி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்த தீர்வில்லை.

இன்று பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் கடுமையான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வுகள் எதுவும் இல்லை. ரணசிங்க பிரேமதாசவால் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளனர். இளைஞர் யுவதிகள் கூட கைவிடப்பட்டுள்ளனர். யானை-மனித மோதலுக்கும் இதுவரை எந்த தீர்வுகளும் இல்லை.

பயிர் சேதம், உயிர் இழப்பு மற்றும் சொத்து சேதங்களுக்கு முறையான காப்பீட்டுத் திட்டங்கள் எதுவும் இந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை.

தேர்தல் காலத்தில் மின்சார வேலிகள் அமைப்பதாகக் கூறிக்கொண்டவர்கள் அரசியல் நாடகங்களை அரங்கேற்றி மோசமான நடிகர்களாக இன்று மாறியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வாக்குறுதியளித்த உத்தரவாத விலையும் இன்று கிடைத்தபாடில்லை.

நெல்லுக்கு சட்ட ஏற்பாடுகள் ரீதியாக பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்த உத்தரவாத விலை இன்று வரை கிடைக்கவில்லை.

அரசாங்கத்திடம் இல்லாத தீர்வுகள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் காணப்படுகின்றன.

இன்று, அரசாங்கம் பாரம்பரிய விவசாய உற்பத்திகளை கூட தடை செய்து, விவசாயிகளின் இடங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று கூறி கையகப்படுத்தி வருகின்றன.

விவசாயிகள் படும் துன்பத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நியாயமான விலை கிடைக்காமையினால் அரிசி, சோளம் மற்றும் உருளைக்கிழங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வுகள் இல்லாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தியிடம் தீர்வுகள் உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலவச சுகாதாரம் என்பது பெயருக்கு மட்டுமே. ஏனைய சகல நடவடிக்கைகளும் பணம் செலவழித்தே செய்ய வேண்டியுள்ளது.

சிறுநீரக நோய் கடுமையான பிரச்சினையாக காணப்படும் கெபித்திகொல்லாவ பிரதேசத்தில் அமைந்து காணப்படும் வைத்தியசாலையில் போதுமான டயாலிசிஸ் உபகரணங்கள் இல்லை.

இவற்றை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தால் முடியாவிட்டால், நாம் இதற்காக நடவடிக்கை எடுப்போம். நாட்டில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இலவச சுகாதாரம் இருந்தபோதிலும், போதுமான மருந்துகள் இல்லை.

இலவச சுகாதாரம் என்பது அடிப்படை மற்றும் மனித உரிமையாக காணப்படுவதனால், அது பாதுகாக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் பொய்களால் இனியும் நாம் ஏமாந்து விடக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

குண்டு வெடிப்பில் பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளருக்கு பிணை [VIDEO]

மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம் – மனோ எம்.பி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்

editor