நாளை (09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
தொழில் கௌரவ அமைச்சர் (கலாநிதி) அனில் ஜயந்த அவர்களின் தலைமையில் மற்றும் தொழில் கௌரவ பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் 2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்தக் குழு கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
தொழில் அமைச்சரினால் 2025.12.12 ஆம் திகதி ஆக்கப்பட்ட இந்த ஒழுங்குவிதி 2025.12.18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
“ஏதேனும் வதிவிட வசதியுள்ள ஹோட்டலில் விருந்தினர்களை வரவேற்கும் பெண், பெண்கள் உடை அறை பணியாளர், பெண்கள் ஆடை விற்பனை நிலைய பணியாளர் அல்லது பெண்கள் தூய்மை பணிப்பெண் ஆகிய பதவிகளில், 18 வயது பூர்த்தியடைந்த எந்தப் பெண்ணையும் காலை 6.00 மணிக்கு முன்பும் மலை 6.00 மணிக்குப் பிறகும் பணியில் ஈடுபடுத்தலாம்”, எனும் தற்பொழுது காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் இந்த ஒழுங்குவிதி மூலம் திருத்தப்படுகின்றது.
அதற்கமைய, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக, ‘வதிவிட வசதியுள்ள ஹோட்டல்களில் உணவு மற்றும் பான வரவேற்பாளர்’ (Food and Beverage Stewardess) பணிகளில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் மாலை 6.00 மணிக்குப் பின்னரோ அல்லது மறுநாள் காலை 6.00 மணிக்கு முன்னரோ பணியில் ஈடுபடுத்தத் தேவையான சட்டத் திருத்தங்கள் இந்த ஒழுங்குவிதி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த ஒழுங்குவிதியின் கீழ் ‘ஏதேனும் ஒரு பெண் பணியாளரின் பணி நேரம் மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 6.00 மணிக்குமிடையிலான ஒரு நேரத்தில் முடிவடையும் போது, அந்தப் பணி முடிந்த நேரத்திலிருந்து காலை 6.00 மணி வரை அவருக்குப் பொருத்தமான தங்குமிடத்தை வழங்குவது அல்லது அவரது வழக்கமான வசிப்பிடத்திற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவது உள்ளிட்ட அந்தப் பெண்ணின் சுகாதாரக்கவனிப்பு மற்றும் நலன்புரிக்கு தொழில்தருனர் பொறுப்பேற்க வேண்டும்’, என்ற சட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இதன்போது குழுவில் தெரிவித்தனர்.
இலங்கையின் தற்போதைய பெண்கள் சனத்தொகை விகிதம் 51% ஆக இருந்தாலும், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 34% ஆகவே உள்ளது.
தற்போது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக, பெண்களின் தொழில் பங்கேற்புக்கு அதிக வாய்ப்பை வழங்கும் நோக்கில், தற்போதுள்ள சட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் பெண் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பல முன்மொழிவுகளும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயங்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் குழுவில் முன்வைக்கப்பட்டன.
அதற்கமைய, இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக கௌரவ தொழில் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
