சீனாவில் நிர்மாணிக்கப்பட்ட உலகின் மிக உயரமான ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களாக இதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் சாத்தியமானதன் காரணமாக குய்சோவில் உள்ள மற்றொரு பாலத்தின் பொறியியல் சாதனையும் தகர்க்கப்பட்டுள்ளது.
சீனாவின் கரடுமுரடான தெற்கு மாகாணமான குய்சோவில் உள்ள நதி மற்றும் பரந்த பள்ளத்தாக்கின் மேலே 625 மீட்டர் உயரத்தில் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் அமைந்துள்ளது.
உலகின் இரண்டாவது மிக உயரமான 565 மீட்டர் பெய்பன்ஜியாங் பாலமும் குய்சோவிலேயே உள்ளது.
“ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் திறக்கப்படுவதன் மூலம் இரு பகுதிகளுக்கும் இடையிலான பயண நேரம் இரண்டு மணி நேரத்திலிருந்து இரண்டு நிமிடங்களாகக் குறையும்” என மாகாண போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் “பிராந்திய போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் புதிய தாக்கத்தையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தசாப்தங்களில் சீனா முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.
இது நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கலுக்கும் வித்திட்டுள்ளது.