உலகம்

உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது – மனித உரிமைகள் நீதிமன்றம்

உக்ரைனுக்கு எதிரான போரில், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளது என, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், நேற்று (9) இரண்டு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியது.

உக்ரைன், நெதர்லாந்து ஆகியவை, ரஷ்யாவிற்கு எதிராக தொடுத்த வழக்குகளை இந்த நீதிமன்றம் விசாரித்து வந்தது.

ஒன்று, உக்ரைன் மீதான போர் தொடங்கியதிலிருந்து முழு அளவிலான படையெடுப்பின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்கு.

மற்றொன்று, 2014ல் 298 உயிர்களை பலிவாங்கிய மலேஷியா எயார்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட வழக்கு.

கடந்த 2014ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற மலேஷியன் எயார்லைன்ஸ் விமானம், ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் படைகளுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தபோது கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அந்த விமானத்தில் 196 நெதர்லாந்து பயணியர் உட்பட 298 பேர் இருந்தனர்.

இந்த இரண்டு வழக்குகளிலும், சர்வதேச விதிகளை ரஷ்யா மீறியுள்ளதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த, 2022ல் நீதிமன்றத்தின் நிர்வாக அமைப்பு, ரஷ்யாவை நீக்கி உத்தரவிட்டது. அதனால் தற்போதைய உத்தரவுகள், ரஷ்யாவை கட்டுப்படுத்தாது.

அதே நேரத்தில் ரஷ்யா மீதான புகார்களில் ஏற்கனவே விசாரணையை தொடங்கியதால், இந்த நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

முழு விசாரணை நடந்துள்ளதால், ரஷ்யா மீது ஐ.நா., மனித உரிமை கமிஷன் உள்ளிட்டவற்றில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில், இந்த உத்தரவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

Related posts

கத்தார் FIFA அரங்கில் சாகிர் நாயகவின் மார்க்கப்பிரச்சாரம் செய்ய ஆயத்தம்!

ஸ்பெயின் தலைநகர் முடக்கம்

கப்பலில் பரவியது கொரோனா வைரஸ் : 3,700 பயணிகளின் நிலை கவலைக்கிடம்