உலகம்

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் பலி – 30 பேர் காயம்

உக்ரைனின் சுமியில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இப்போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இரு தரப்பினரும் மாறிமாறி தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனின் கீவ் நகருக்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலிலேயே ஒருவர் பலியானதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக மீட்புப் படையினரும் மருத்துவர்கள் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரஷ்யாவின் இத்தாக்குதலைக் கண்டித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, ‘பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிந்தும் தாக்குதல் நடத்துவது என்பது பயங்கரவாதம். இதனை உலக நாடுகள் ஏற்கக்கூடாது’ என்றுள்ளார்.

இதேவேளை உக்ரைனின் செர்னிஹிவ் அருகே உள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து, 109 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

-அல் ஜசீரா

Related posts

மரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு மகாராணி அனுமதி