உலகம்

ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சவுதி – “எந்தவொரு தாக்குதலையும் ஏற்க மாட்டோம்!”

சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் இடையிலான இந்த முக்கியமான பேச்சுவார்த்தை நேற்று (27) தொலைபேசி வாயிலாக நடைபெற்றது.

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் பேசிய சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் சவுதி அரேபியா எதிர்ப்பதாக உறுதிப்படுத்தினார்.

மேலும், “ஈரானுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும், அச்சுறுத்தலையும் அல்லது தூண்டுதலையும் ரியாத் ஏற்காது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உரையாடலின் போது, ஈரானின் இறையாண்மையை மதிப்பதாகவும், ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் சவூதி அரேபியாவின் வான்பரப்பையோ அல்லது நிலப்பகுதியையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் இளவரசர் முகமது பின் சல்மான் உறுதியளித்தார்.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் பின்வருமாறு கூறினார்:

​”பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டவும், அதன் நாடுகளை செழிப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லவும் எடுக்கப்படும் எங்களது அனைத்து முயற்சிகளும் மக்களின் நலனுக்கானவை.

இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.”

அமைதி மற்றும் நிலையான பாதுகாப்பை நிலைநாட்ட ஈரானுடனும் மற்ற பிராந்திய நாடுகளுடனும் ஒத்துழைக்க ரியாத் தயாராக இருப்பதாகவும் பின் சல்மான் தெரிவித்தார்.

மறுபுறம், ஈரானிய ஜனாதிபதி பெசெஷ்கியன் பேசுகையில், நட்பு உறவுகளை மேம்படுத்தவும் இஸ்லாமிய நாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஈரானின் தேசிய ஒற்றுமை மற்றும் பிராந்திய இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதே நேரத்தில், வெளிநாட்டு அழுத்தங்களைக் கண்டித்த அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

​”பொருளாதார அழுத்தம், போர் தொடுத்தல் மற்றும் நாட்டில் அண்மையில் நடந்த நிகழ்வுகளில் கலவரக்காரர்களைத் தூண்டிவிட்டு ஆதரிப்பதன் மூலம், அமெரிக்காவும் சியோனிச அமைப்பும் (இஸ்ரேல்) ஈரானிய மக்களுக்கு எதிரான விரோதப் போக்கை தீவிரப்படுத்தியுள்ளன.”

சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான இந்த உரையாடல் மத்திய கிழக்கு அரசியலில் ஒரு மிகமுக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

பல தசாப்தங்களாக நிலவி வந்த பகைமையை மறந்து, இரு நாடுகளும் தற்போது ஒற்றுமை மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. (AA)

Related posts

வீரியம் காணும் ஒமிக்ரோன்

நியுசிலாந்தில் மீண்டும் கொரோனா

இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்