இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
நேற்று (18) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இயங்கி வந்த கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் வழக்கு ஒன்றிற்காக ரூபா 2,300 பணம் இலஞ்சமாக கேட்கப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரிகளிடம் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய மருதமுனை பகுதியில் இயங்கி வந்த குவாஷி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அருகில் மாறுவேடத்தில் காத்திருந்து இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிபதி மற்றும் மனைவியை இன்று கைது செய்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 2,300 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்ததுடன், சந்தேக நபர்கள் இன்று (19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
-பாறுக் ஷிஹான்