உள்நாடு

இலங்கையில் இருந்து இஷாரா செவ்வந்தி எவ்வாறு தப்பிச் சென்றார்? வெளியானது திடுக்கிடும் தகவல்கள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விதம் குறித்து நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, பாதுகாப்புப் பிரிவிடம் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கொலை சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் தலைமறைவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இலங்கை பொலிஸ் குழுவினர், அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சந்தேக நபர்களை ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்தனர்.

நேற்று (15) மாலை 6.52 மணியளவில் சந்தேக நபர்களுடன் விமானம் நாட்டை வந்தடைந்தது.

இவ்வாறு அழைத்துவரப்பட்ட குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் பல்வேறு பொலிஸ் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன்படி, இஷாரா செவ்வந்தி, டுப்ளிகேட் இஷாரா எனப்படும் தக்‌ஷி, ஜே.கே. பாய் மற்றும் ஜப்னா சுரேஷ் ஆகியோர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கம்பஹா பபா, களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொடை பபி, மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த நடவடிக்கை தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற பொலிஸ் அதிகாரி ஆகியோர் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்த நடவடிக்கைக்காக நேபாளம் சென்றுள்ளனர்.

அங்கு, நேபாள துணைத் தூதுவர் சமீரா முனசிங்க மற்றும் அவரது கணவர் ஆகியோர் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி, அந்நாட்டு பொலிஸாரையும் தொடர்புபடுத்தி உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து செயற்பட்ட இலங்கை விசாரணை அதிகாரிகள், மற்றொரு தரப்பின் மூலம் ஜே.கே. பாயை கைது செய்துள்ளனர்.

அவரிடம் இஷாரா குறித்து ரொஹான் ஒலுகல வினவியபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், அவரிடமிருந்து இஷாராவின் தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் பெற்றுள்ளனர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், இஷாரா தங்கியிருந்த இடம் கண்டறியப்பட்டு, ஒலுகல மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, அவர் வசித்த வீட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளி தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நேபாள பொலிஸாரைக் கொண்டு அந்த இடத்தை சோதனையிட்டபோது, இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வந்த தமிழினி என்ற பெண், ஒரு ஈரடுக்கு மாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருப்பது தெரியவந்தது.

இதற்காக அவர் மாதந்தோறும் 6,000 நேபாள ரூபாய் செலுத்தியதும் கண்டறியப்பட்டது.

மேலதிக விசாரணையில், தமிழினி என்ற பெயரில் தங்கியிருந்தது இஷாரா என்பது உறுதி செய்யப்பட்டது.

அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்திய பின்னர், நேபாள பொலிஸாருடன் அந்த இடத்திற்குச் சென்ற ஒலுகல மற்றும் மற்றுமொரு அதிகாரி, கீழ் தளத்தில் தங்கியிருந்து, அவர்களை மேல் தளத்திற்கு அனுப்பி இஷாராவை கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, நேபாள பொலிஸார் அவரைக் கைது செய்தபோது அவர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

பின்னர், ஒலுகல அவர் இருந்த இடத்திற்குச் சென்று, “எப்படி இருக்கிறீர்கள் செவ்வந்தி?” என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், “நன்றாக இருக்கிறேன் சேர்” என்று கூறியுள்ளார்.

“தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று ஒலுகல கூறியபோது, “சேர், எனக்கு இந்த நாடே வெறுத்துப்போயிருந்தது” என்று அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு சுமார் ஒரு மாதம் மத்துகமவில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்ததாக இஷாரா கூறியுள்ளார்.

பின்னர், பத்மேயின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதிக்குச் சென்று அங்கும் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்துள்ளார்.

அப்போது ‘பெக்கோ சமன்’ என்பவர் அவருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர், யாழ்ப்பாணம் சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்து, ஜே.கே. பாயுடன் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இதற்கு சுமார் ஐந்து மணி நேரம் ஆனது என்றும், ஒரு பெரிய படகில் சிறிது தூரம் சென்று, பின்னர் ஒரு சிறிய படகு மூலம் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும் இஷாரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தபோது, ஜே.கே. பாய் அவருக்கு ‘தமிழினி’ என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன் பின்னரே நேபாளம் சென்றதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், தன்னுடன் ஜே.கே. பாய் தவிர மேலும் நான்கு பேர் இருந்ததாக இஷாரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கம்பஹா பபா, நுகேகொடை பபி, ஜப்னா சுரேஷ் மற்றும் இஷாராவின் தோற்றத்தில் இருந்த தக்‌ஷி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜப்னா சுரேஷும் தக்‌ஷியும் விமானம் மூலம் நேபாளம் வந்துள்ளனர்.

அவர்கள் ஆறு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த நிலையில், பத்மே கைது செய்யப்பட்ட பின்னர், ஆறு பேரும் ஆறு வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தக்‌ஷியின் விபரங்களைப் பயன்படுத்தி செவ்வந்தியை ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்ப பத்மே ஏற்பாடு செய்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

எனினும், பத்மேயின் கைதைத் தொடர்ந்து, இந்தக் குழுவினர் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இதேவேளை, நுகேகொடை பபியிடம் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு கெஹெல்பத்தர பத்மே தன்னையும், கம்பஹா பபாவையும் இந்தியாவிற்கு வரவழைத்ததாக தெரியவந்துள்ளது.

மன்னார், பேசாலை பகுதியிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும், அதற்கான ஏற்பாடுகளை ‘பெக்கோ சமன்’ என்பவர் மூலம் பத்மே செய்ததாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

அவர் 2019 ஆம் ஆண்டு கொஹுவல, ஜம்புகஸ்முல்ல பிரதேசத்தில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அன்றே டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

மட்டக்களப்பில் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

editor

சாரதிகள் கவனத்துக்கு

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!