உள்நாடுவிசேட செய்திகள்விளையாட்டு

இலங்கை வேகப்பந்து வீச்சை பலப்படுத்தும் லசித் மாலிங்க

இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணம் தொடர்பில் இலங்கை அணியின் வேகப்பந்து குழாத்தை பலப்படுத்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கை அணியுடன் இணைந்து பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

சிம்பாப்வேயுடன் நடைபெறும் ஒருநாள் மற்றும் ரி20 தொடர் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, நாளை (22) இலங்கை அணி சிம்பாப்வே புறப்பட்டுச் செல்லவுள்ளது.

அதுவரை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு லசித் மாலிங்க பயிற்சிகளை வழங்கி வருகிறார்.

சிம்பாப்வே அணிக்கெதிரான தொடருக்காக இலங்கை அணி தயாராகிவரும் நிலையில், அவர் இலங்கை அணியின் வீரர்களுக்குப் பந்துவீச்சு தந்திரோபாயங்கள் மற்றும் நுட்பங்கள் குறித்து ஆலோசனை வழங்கிவருகின்றார்.

இலங்கை அணி ஓகஸ்ட் மாதம் சிம்பாப்வேயிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக 30 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 84 ரி20 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் மாலிங்க, தற்போது பல லீக் அணிகளுக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாலிங்க தற்போது அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் தங்கி இருப்பதோடு குறுகிய கால விஜயமாகவே இலங்கை வந்துள்ளார். இதன்போது இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கையை அடுத்து அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அவர் முன்வந்துள்ளார்.

‘அணியினருடன் பயிற்சியில் இணைந்தது நல்ல விடயமாக நான் கருதுகிறேன். இன்னும் சில நாட்கள் நான் இலங்கையில் இருப்பேன் அந்தக் காலத்தில் எனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள நான் எதிர்பார்த்துள்ளேன்’ என்று மாலிங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவத்துள்ளார்.

சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இலங்கை குழாம் தேர்வு செய்யப்பட்டபோதும் விளையாட்டுத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு காத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கர்தினால் தலைமையிலான 60 பேரடங்கிய குழு வத்திக்கானுக்கு

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி பலி – பாணந்துறையில் சோகம்.

பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியில் மாற்றம்