அரசியல்உள்நாடு

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் (SLLLA) 2025 ஜூன் 14 ஆம் திகதியன்று நீர்கொழும்பு அவென்ரா கார்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த வரி தொடர்பான செயலமர்வுக்கு மது வரி திணைக்களம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஒத்துழைக்கவில்லை என தெரிவித்து இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் (SLLLA) ஜனாதிபதிக்கு விஷேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்த விடயம் குறித்து கௌரவ ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

“மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே, “வரி சக்தி” வரி வாரத்துடன் இணைந்ததாக எமது சங்கம் 2025 ஜூன் மாதம் 14 ஆம் திகதியன்று செயலமர்வொன்றை ஏற்பாடு செய்தது.

வரி மோசடியை நிறுத்தி அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் உண்மையான விருப்பமாக இருந்தது.

இந்த செயலமர்வுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் பங்கேற்று, மதுபான உரிமதாரர்களுக்கு வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து முழுமையாக விளக்கினார், அதற்காக, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், இந்தப் செயலர்வுக்கு நாம் அழைப்பு விடுத்திருந்த மதுவரித் திணைக்களம் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. மேலும், மது வரித் திணைக்களம் இதர நிறுவனங்களை தவறாக வழிநடத்தும் வகையில் எமது சங்கம் ஒரு மதுபான ஊக்குவிப்பு நிகழ்வுத்திட்டத்தை நடத்துவதாகக் கூறி மற்றைய நிறுவனங்கள் எமது செயலமர்வில் கலந்து கொள்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய கிடைத்துள்ளது.

மது வரித் திணைக்களம் மதுபான உரிமதாரர்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு வழங்குவதற்கு தயக்கம் காட்டுவதோடு மதுபான உரிமதாரர்கள் சட்டத்தை அறிந்திருத்தல் அத் திணைக்கள அலுவலர்களின் ஊழல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இடையூறாக அமையலாம் என அவர்கள் நினைப்பதாக தெரிகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட மதுபான உரிமங்களுக்கான விண்ணப்பங்களுக்கு உரிமங்களை பெறுவதற்கு மேற்படி விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுமாறு மது வரித் திணைக்களத்தின் சட்டப் பிரிவு அறிவுறுத்தல் வழங்கிவிட்டு அவ்வாறு வழக்கு தாக்கல் செய்த பின்னர் அந்த உரிமங்களை வழங்குவதற்கு தமது திணைக்களம் ஆட்சேபிக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும் அதற்காக மது வரி திணைக்கள அலுவலர்கள் இலஞ்சம் கேட்பதாகவும் எமது சங்கத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

தேர்தல் காலத்தில் மதுபான உரிமங்கள் வழங்கியமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மது வரித் திணைக்கள அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு மூலம் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
மதுபான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் பொது இடங்களில் மேற்கொள்ளப்படுவதோடு அது தொடர்பாக மது வரித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ளாமை கவலை அளிக்கிறது.

எமது சங்கம் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நல்லெண்ணத்துடனமும் நேர்மையுடனும் ஏற்பாடு செய்திருந்த வரி செயலமர்வை மதுபான ஊக்குவிப்பு நிகழ்வாக சித்தரித்து அரசுக்கும் எமக்குமிடையே விரிசலை ஏற்படுத்தி அதன் மூலம் மது வரித் திணைக்களத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுப்பதற்கு அதன் அலுவலர்கள் முயற்சிப்பதாக தெரிகிறது.

அது தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணையினை இலஞ்ச ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அரசுக்கு பாதகமாகவும் வேறு தரப்பினருக்கு சாதகமாகவும் செயற்படுவதற்கு மதுவரித் திணைக்களம் முயற்சிப்பதை சுட்டிக்காட்டுவதற்கு எமது சங்கம் தயாராக உள்ளதெனவும் தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள அக் கடிதத்தின் பிரதிகள் ரங்க திசாநாயக்க (பணிப்பாளர் நாயகம் – இலஞசம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு) யூ டீ என் ஜயவீர (ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்) எம் எல் உயத குமார பெரேரா (மது வரி ஆணையாளர் நாயகம்) ரோஹண சேனாரத்ன (மேலதிக மது வரி ஆணையாளர் நாயகம்) ஜயந்த டீ சில்வா (பிரதி மது வரி ஆணையாளர்) ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 466 பேர் கைது

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் வீசா அனுமதி காலம் நீடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ