இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ உயர் மட்ட விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நகதானி ஜென் நேற்றுமுன்தினம் (03) நாட்டுக்கு வருகை தந்தார்.
ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாடா மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கௌரவ கனோ கோஜி ஆகியோருடன், ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நேற்று (04) காலை கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.
பாதுகாப்பு அமைச்சில் அவருக்கு இலங்கை இராணுவத்தின் சம்பிரதாய மரியாதை அணிவகுப்பொன்று அளிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அவரை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலின் போது, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி, இரு தரப்பினரும் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவத்தை வலியுறுத்தினர்.
அனர்த்த முகாமைத்துவம், எல்லை தாண்டிய மனித கடத்தலைத் தடுப்பது மற்றும் கடலில் அரசு அல்லாதவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவது போன்ற முக்கியமான விடயங்களில் ஒத்துழைப்பின் முக்கியத்துவமும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டு முயற்சிகள் மூலம் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தும் வகையில், பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான தங்கள் பொதுவான தொலைநோக்குப் பார்வையை இரு நாடுகளும் மீண்டும் வலியுறுத்தின.
இலங்கை தூதுக்குழுவின் தலைவரான பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள், அனர்த்த முகாமைத்துவ, கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி முயற்சிகளில் ஜப்பானின் நீண்டகால மற்றும் தொடர்ச்சியான உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.
விசேடமாக இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு, வானிலை ஆராய்ச்சி துறை மற்றும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் ஜப்பானின் உதவியையும் அவர் பாராட்டினார்.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நகதானி, இலங்கையின் நீண்டகால கூட்டாண்மைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, உளவுத் தகவல் பகிர்வு, அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி, கடல்சார் சட்டம் மற்றும் தேடல் மற்றும் மீட்பு பணிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்தார்.
ஜப்பானிய தூதுக்குழுவில் பாதுகாப்பு அமைச்சின் சிறப்பு ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் பன்ஷோ கொய்ச்சிரோ (ஓய்வு), கூட்டுப் பணியாளர் பிரதி தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மட்சுனாகா கோஜி மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட தூதரக அதிகாரிகளும் அடங்கினார்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), தேசிய புலனாய்வு பிரதானி உட்பட இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை தளபதிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர்கள் நாயகம் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கிழக்காசிய இயக்குநர் ஜெனரல் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பொரளை பொது மயானத்தில் இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையில் இறந்த ஜப்பானிய பிரஜைகளை நினைவுகூரும் வகையில் மலர் அஞ்சலி செலுத்தினார்.