அரசியல்உள்நாடு

இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (08) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.

துருக்கி குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம் இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு உரையாற்றிய சபாநாயகர், குறிப்பாக வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு துருக்கி ஒரு முக்கிய பொருளாதார பங்காளியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் மீள ஸ்தாபிக்கப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கம் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய வாய்ப்புகளை வளர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டத்தின் 3வது அமர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பது இரு நாடுகளுக்கும் மிகவும் சரியான தருணம் என துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் குறிப்பிட்டுள்ளார்.

மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச் சங்கம் வர்த்தகம், சுற்றுலா, கல்வி, பாதுகாப்பு, கடல்சார் விவகாரங்கள் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட நட்புறவுச்சங்கத்தின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

தன்னைத் தெரிவு செய்தமைக்காக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, சங்கத்தின் பணி மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை அனைத்து மட்டங்களிலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

நன்றியுரை ஆற்றிய சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம், சபாநாயகருக்கும், துருக்கி குடியரசின் தூதுவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், நட்புறவுச் சங்கத்தின் நோக்கங்களை நிலைநிறுத்த ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

Related posts

‘The Battle’ உடன் மோதும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாக்கார்

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் இன்றும் விசாரணைக்கு