அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில், இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 18 கோடி இந்திய ரூபாய்க்கு (61 கோடி இலங்கை ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டார்.
இதன் மூலம், ஐ.பி.எல். ஏல வரலாற்றில் அதிக விலைக்கு விற்பனையான இலங்கை வீரர் என்ற சாதனையை மதீஷ பத்திரன படைத்துள்ளார்.
மதீஷ பத்திரனவிற்கான ஏலம் 2 கோடி இந்திய ரூபாய் என்ற அடிப்படை விலையில் தொடங்கியது. அவரை வாங்குவதற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
ஏலத் தொகை 16 கோடியைத் தாண்டிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தில் இறங்கி, இறுதியாக 18 கோடி ரூபாய்க்கு அவரைத் தன்வசப்படுத்தியது.
கடந்த காலங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பத்திரன, தனது சிறப்பான யோர்க்கர் பந்துவீச்சின் மூலம் பெரிதும் அறியப்பட்டவர். இம்முறை கொல்கத்தா அணியின் பந்துவீச்சுப் படைக்கு அவர் கூடுதல் வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே ஏலத்தில் அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் கிரீனை 25.20 கோடி ரூபாய்க்கு KKR அணி வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
