நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களால் இன்றைய(09) தினம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி.
அரசாங்கமானது இலங்கையில் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குச் செய்கைத் தொழில்களில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து 2025.08.25 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரையிலும், உருளைக்கிழங்கு மீது ரூ.60-லிருந்து ரூ.80 ஆக சிறப்புப் பண்ட வரி (SCL) அதிகரிக்கப்பட்டன. இந்த வரி அதிகரிப்பு மூலம் 22 மில்லியன் நுகர்வோர் மீது மேலதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஏழ்மை நிலை 7 மில்லியனாக அதிகரித்துள்ளமையால், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சமூகத்தில் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இதன் பிரகாரம், நான் பின்வரும் கேள்விகளை எழுப்புவதோடு, அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
- இலங்கையில் தற்போது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சார்ந்த செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் எத்தனை பேரளவில் காணப்படுகின்றனர்? அவர்கள் வெற்றிகரமாக அறுவடை செய்யும் பருவங்கள் யாவை? இந்தக் காலப்பருவங்களையும் சேர்த்து, 2024 ஆம் ஆண்டில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் அளவுகள் யாவை? இந்த உற்பத்தி உள்நாட்டு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குத் தேவையில் எத்தனை சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன?
- SCL வரி மூலம் வருடாந்தம் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய உற்பத்திச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு என்னென்ன சலுகைகள் கிடைப்பெறுகின்றன? அச்சலுகைகளை சபையில் சமர்ப்பிப்பீரா? இந்த சலுகைகள் மூலம் ஒட்டுமொத்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு போதுமான பாதுகாப்பு கிடைக்கப் பெறுவதை அரசாங்கம் உறுதி செய்கிறதா ?
- இந்த வரி முறை (SCL) அறிமுகப்படுத்தப்பட்ட 2007 முதல் ஆண்டுதோறும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் அளவுகளையும், இதற்காக விதிக்கப்படும் வருடாந்த வரி விகிதங்கள், அந்த வரிகள் எந்த திகதிகளில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டன, அவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற வருவானம் போன்றவற்றை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? 2025 ஆகஸ்ட் இல் இந்த வரி அதிகரிப்புக்கு முன்பு நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் அளவுகள் யாவை ? இது வியாபாரிகளுக்கு சட்டவிரோத இலாபம் ஈட்டுவதற்கான ஒரு வாய்ப்பு என்பது அரசாங்கத்திற்குத் தெரியாதா? அப்படியானால், இது முந்தைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சீனி வரி மோசடியைப் போன்ற ஒரு செயல்முறையல்லவா?
- சீனி வரி மோசடிக்குப் பிறகு இறக்குமதி வரிகளை விதிக்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதா? ஆம் என்றால் அது யாது? பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீது வரி விதிக்கும் முடிவுகளை எடுக்கும் போது இந்த புதிய வழிமுறை பின்பற்றப்பட்டதா?
- அவ்வாறில்லையென்றால், உணவுப் பாதுகாப்புக் குழு மற்றும் தேசிய வரிக் கொள்கைக் குழுவால் இந்த வரி அதிகரிப்புகளை அங்கீகரிக்கும் செயல்பாட்டில் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் யாவை? குறித்த குழுக்கள் ஒவ்வொன்றும் எடுத்த முடிவுகளை இந்தச் சபையில் சமர்ப்பிக்க முடியுமா? இதன் பிரகாரம், இந்த வருடம் எடுக்கப்பட்ட முடிவுகள் வரி விதிக்கப்பட்டதிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளிலிருந்து வேறுபட்டதா? அது எவ்வாறு? இந்தச் செயல்பாட்டில் நுகர்வோர் மீது விதிக்கப்படும் வரிகள் பரிசீலிக்கப்பட்டனவா ?
- அத்தியாவசிய நுகர்வுப்பொருட்கள் மீது வருடத்திற்கு வரையறுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பண்டங்கள் மீது (SCL) வரியை விதிப்பதன் மூலம் ஒரு சில இடைத்தரகர்கள் மட்டுமே எப்போதும் பயனடைவதால், விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சலுகை கிடைக்கும் வேறு எந்த மாற்றுத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லையா? இருந்தால், அது யாது ?