சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் அரசியலமைப்பின் 79வது யாப்பின் பிரகாரம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் அண்மையில் (22) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
2013 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சமுர்த்தி சட்டத்தைத் திருத்துவதற்காக, 2025 ஜூன் 17 ஆம் திகதி கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், நிதி நிறுவனங்களின் நிதி மேற்பார்வையை மேம்படுத்துவதற்கும், நிதி நிறுவனங்களுக்குள் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்குமான ஏற்பாடுகளை வழங்குகின்றது.
அத்துடன், இந்தத் திருத்தத்தின் ஊடாக சமுர்த்தி சமுதாய அடிப்படையிலான வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படையிலான சங்கங்களின் கணக்குகளை நிதி நிறுவனங்களுக்குள் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்காக கணக்காய்வு செய்வதற்குத் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு வழங்குவதன் மூலம், தற்போதுள்ள சட்டரீதியான மற்றும் தேசிய கணக்காய்வு ஏற்பாடுகளுக்கு இணங்குவதை உறுதி செய்கின்றது.
1956 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டமூலம், தற்போதுள்ள “கட்டுப்பாட்டாளர்” மற்றும் “இறப்பர் கட்டுப்பாட்டாளர்” ஆகிய பதவிகளுக்குப் பதிலாக “பணிப்பாளர் தலைமையதிபதி” என்ற பதவியை மாற்றீடு செய்வதற்கும், அதற்கமைய, இறப்பர் அபிவிருத்தித் துறையின் கட்டுப்பாட்டை பணிப்பாளர் தலைமையதிபதி பதவியின் கீழ் கொண்டுவருவதற்கும் ஏற்பாடுகளை செய்கின்றது.
அதற்கமைய, இந்த இரண்டு சட்டமூலங்களும் 2025 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சமுர்த்தி (திருத்தச்) சட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றன.