இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும், இது குறித்து பிசிசிஐ-யிடம் அவர் தனது முடிவைத் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். தனது மனநிலையை பிசிசிஐ-யிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.
அடுத்து சில வாரங்களில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில், பிசிசிஐ அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
விராட் கோலி இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருந்தார். விராட் கோலிக்கு தற்போது 36 வயதாகும் நிலையில், அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
2024 டி20 உலகக் கிண்ண முடிவில் ரோகித் மற்றும் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்று இருந்தனர். அதன் பின் 38 வயதான நிலையில் ரோகித் சர்மா கடந்த சில நாட்கள் முன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். தற்போது 36 வயதாகும் நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளாவது விராட் கோலி விளையாடுவார் என்பதால், 2025 முதல் 2027 வரை நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் முழுமையாக பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது இந்திய டெஸ்ட் அணியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் இந்த இரண்டு ஆண்டு காலத்திற்கும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பிடிவாதமாக இருப்பதால்தான் இந்த எதிர்பார்ப்பும் உள்ளது.
அதை விராட் கோலி பூர்த்தி செய்வார், இரண்டு ஆண்டுகள் முழுமையாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் அதிரடியாக ரோகித் சர்மாவைத் தொடர்ந்து ஓய்வு முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் அடுத்த மாதம் துவங்க உள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும்.
இந்த நிலையில் விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவர் கடைசியாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் சரியாக ஓட்டங்கள் குவிக்கவில்லை. அதனால் விமர்சனத்தையும் சந்தித்திருந்தார்.
எனினும், அவுஸ்திரேலியாவில் கோலி ஒரு சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும், ஐபிஎல் தொடரிலும் நன்றாகவே ஓட்டங்களை குவித்து வந்தார்.
அதனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது ஃபார்மை மீட்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இந்த அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று விராட் கோலி தனது டெஸ்ட் ஓய்வு முடிவை திரும்பப் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.