இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியுள்ளது.
முதல் 2 போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும், நியூசிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தன.
இந்நிலையில் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி 337 ஓட்டங்களைப் பெற்றது.
அந்த அணியின் டேர்ல் மிட்செல் 137 ஓட்டங்களையும், கிளென் பிலிப்ஸ் 106 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இதையடுத்து 338 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.
ரோஹித் சர்மா 11 ஓட்டங்களிலும், அணித் தலைவர் சுப்மன் கில் 23 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தார்.
108 பந்துகளை எதிர்கொண்ட கோலி சதம் கடந்து 124 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இது சர்வதேச அரங்கில் அவர் அடித்த 85 ஆவது சதமாகும். ஒருநாள் போட்டித் தொடர்களில் இது கோலியின் 54 ஆவது சதமாகும்.
எனினும் கோலியின் ஆட்டமிழப்புக்கு பின்னர் இந்திய அணி முழுவதுமாக தடுமாறியது.
நித்திஸ் குமார் ரெட்டி 53 ஓட்டங்களையும், ஹர்ஷித் ரானா 52 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் வந்த எவரும் சோபிக்கவில்லை. இதனையடுத்து இந்திய அணி 46 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 41 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
தொடர் மற்றும் ஆட்டநாயகனாக டெர்ல் மிட்செல் தெரிவானார்.
இதன்மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணி தொடரை முதன்முறையாக இந்திய மண்ணில் கைப்பற்றியுள்ளது.
