இந்த ஆண்டு ஆரம்பம் முதல் நேற்று (19) வரை நாட்டில் 113 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த விபத்துக்களில் இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விபத்துக்களினால் 216 பேர் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், 490 சிறு விபத்துக்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன் 159 விபத்துக்கள் சொத்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இந்த விபத்துக்களில் அதிகளவாக பாதசாரிகளே உயிரிழந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், அந்த எண்ணிக்கை 33 ஆகப் பதிவாகியுள்ளதாகக் கூறினார்.
அத்துடன், விபத்துக்களில் 45 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த 7 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
