உள்நாடு

இந்த ஆண்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 60 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில், கடந்த 8 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் இரு வேறு பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 57 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (30) இடம்பெற்ற இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் வழிநடத்தப்பட்டவை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிதாரி தப்பிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி (CCTV) கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துப்பாக்கிதாரி தனது இலக்கைத் தவறவிட்டு சிறுமி மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் படி, குறித்த சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒருவர் வசிப்பதுடன், அவர் ‘படோவிற்ற அசங்க’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது சிறையிலிருப்பதும் தெரியவந்தது.

கடந்த 22ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு இவர் உதவியதாக, படோவிற்ற அசங்கவின் எதிர்தரப்பான ‘அவிஷ்க ஏஷான்’ என்பவர் சந்தேகித்துள்ளார்.

இதன் காரணமாகவே அவரது தாய் மற்றும் மைத்துனரை இலக்கு வைத்து நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய போது, “படோவிற்ற காரர்களுக்கு நீங்கள்தான் தகவல் கொடுக்கிறீர்கள்” என துப்பாக்கிதாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

குறித்த நபர் ஒருகாலத்தில் ஏஷான் என்பரின் தரப்பில் இருந்துவிட்டு, பின்னர் அத்தரப்பை விட்டு விலகி அவர்களின் வியாபாரத் தகவல்களை படோவிற்ற அசங்கவிற்கு வழங்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் மீது இன்று (31) காலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் திலீப் சதுரங்க என்ற ‘ரஜவத்தே சதுவா’ என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடந்த 13ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

களுத்துறை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த 29ஆம் திகதி ஏனைய கைதிகள் சிலரால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரிவோல்வர் (Revolver) ரக துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ‘களுத்துறை நவீன்’ எனும் குற்றவாளியின் தரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன், துப்பாக்கிச் சூட்டில் அவரது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதியின் தலைமையில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் விரைவில் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் வௌ்ளியன்று திறக்கப்படும்

நாம் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor