அரசியல்உள்நாடு

ஆட்சியைப் பிடித்த பிறகு அரசாங்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரச சேவையை வலுப்படுத்துவோம், அரச ஊழியர்களைப் பாதுகாப்போம் என்று வழங்கிய வாக்குறுதிகளை நம்பி, பெரும்பாலான அரச ஊழியர்கள் தற்போதைய திசை காட்டி அரசாங்கத்திற்கு வாக்களித்த போதிலும், இன்று மின்சார சபையில் 23,000 பேரினது தொழில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றன.

அரசாங்கம் இவர்களினது தொழில்கள் குறித்து பொறுப்பேற்காது என்றும், அவர்கள் தானாக முன்வந்து ஓய்வு பெறலாம் என்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

மின்சார சபை ஊழியர்களை வீதியில் இறக்கி காலாகாலமாக ஆர்ப்பாட்டத்தை நடத்திய தற்போதைய அமைச்சர்களாக இருந்து வரும் முன்னைய தொழிற்சங்க தலைவர்களால் அவர்களினது தொழில்களுக்கு பொறுப்பு கூற முடியாதாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

‘கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடாக’ எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவைத் வேலைத்திட்டத்தின் கீழ் மிஹிந்தலை தேர்தல் தொகுதியில் இன்று (19) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அதிகாரத்தில் இல்லாதபோது, ​​இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மின்சார சபை ஊழியர்கள் 23,000 பேரினதும் தொழில்களைப் பாதுகாக்க உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருந்தனர்.

ஆனால் இன்று, அதிகாரத்தோடு அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது, ​​மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை விடுத்து ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

அப்போது பெருமையாகப் பேசிக் கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, இதையெல்லாம் மறந்துவிட்டு, அரசாங்கத்தைப் பாதுகாக்க கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர்.

இன்று ஆட்சியைப் பிடித்த பிறகு அரசாங்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று, அரசாங்கம் விவசாயிகள், தொழில்முனைவோர், அரச ஊழியர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் உட்பட அனைவரையும் மறந்துவிட்டு செயல்பட்டு வருகிறது.

போதாக்குறைக்கு அச்சுறுத்தி வருகிறது. அரசாங்கத்தைப் பாதுகாக்க அவர்கள் கொலை செய்யவும், உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாகவும் பிரஸ்தாபித்து வருகின்றனர்.

ஜனநாயகத்தின் மீதான இந்தக தாக்குதல்களை எதிர்கொண்டு சும்மா இருப்பதா அல்லது விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்களைப் பாதுகாக்க வீதிகளில் இறங்குவதா என்பதை மக்களே சிந்திக்க வேண்டும்.

இத்தகைய ஜனநாயகப் போராட்டத்திற்கு தலைமை தாங்க தான் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்கு தரமான உரமுமில்லை. உர மானியங்கள் முறையாக கிடைத்தபாடுமில்லை. களைக்கொல்லிகள் கூட தரம் குறைந்தவையாக காணப்படுகின்றன.

உயர்தர விதைகளும் கிடைத்தபாடில்லை. விவசாய உபகரணங்களின் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

உபகரணங்களை வாடகைக்கு எடுப்பதற்கு கூடிய பணம் செலவாகும் நேரத்தில், காட்டு யானைகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.

இந்தப் பயிர் இழப்புகளுக்கு காப்பீட்டு இழப்பீட்டு முறைகளும் இல்லாமையால், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களுக்காக முடிந்தவரை போராடி அவர்களின் உரிமைகளை பெற்றுத் தர முடிந்த மட்டில் நடவடிக்கை எடுப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

அரசாங்கத்திற்கு சார்பாக சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் – சுனில் ஹந்துநெத்தி.

கற்குழியில் நீராட சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலி.

Nazu டிராவல்ஸ் – ரமழான் கேள்வி பதில் போட்டியில் முதலாம் பரிசாக உம்ராஹ் யாத்திரை

editor