அவுஸ்திரேலியாவில், மெல்போர்னிலிருந்து கிட்டத்தட்ட 200 மைல் வடகிழக்கே உள்ள போர்பங்கா (Porepunkah) கிராமப்புறப் பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில பொலிஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற 1,000 பேர் வசிக்கும் போர்பங்கா பகுதியில் ஆரம்பப் பாடசாலை செவ்வாய்க்கிழமை அதன் அவசரகால நடவடிக்கைகளை செயல்படுத்தியதாகவும், அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அப்பாடசாலையின் அதிபர் ஜில் கில்லிஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி வன்முறை என்பது அரிதான ஒன்றாகும். 1996-ல் தாஸ்மேனியாவில் நடந்த ஒரு பெரும் துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அரசாங்கம் கட்டாயமாக துப்பாக்கிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தியது. இந்த தற்காலிக திரும்பப் பெறும் திட்டங்கள் பொதுமக்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்தன.
பாரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அரிதாக இடம்பெற்றிருந்தாலும், கடந்த ஜூன் மாதம் தாஸ்மேனியாவில் ஒரு வீட்டைக் கைப்பற்றுவதற்கான பிடியாணையை வழங்கச் சென்றபோது, பொலிஸ் அதிகாரி ஏனைய அதிகாரிகளுடன் இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜூன் மாத சம்பவத்தைத் தவிர்த்து, 2020 ஆம் ஆண்டு முதல் 14 அதிகாரிகள் பணியின் போது கொல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தேசிய பொலிஸ் நினைவகம் (Australian National Police Memorial) தெரிவித்துள்ளது.