அரசியல்உள்நாடு

அமைச்சர் லால்காந்த ICCPR சட்டத்தை மீறியுள்ளார் – நாமல் எம்.பி கடும் குற்றச்சாட்டு

விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை மீறி பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி, வணக்கத்திற்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரரை அண்மையில் ‘காட்டுமிராண்டி’ என விளித்து அவமதித்துள்ளதாகவும், இவ்வாறு பௌத்த மதத் தலைவரொருவரை அவமதிப்பதை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

ICCPR சட்டத்தில், “யாரும் போரைப் பரப்புவதோ அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுவதோ கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், லால்காந்த இதில் மதத் துவேஷத்தைப் பரப்பியிருப்பது புலப்படுவதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டுகிறார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், பௌத்த தலைவர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அவதூறுகள் மற்றும் மதத் துவேஷத்தைப் பரப்புவது தொடர்பில் இச்சட்டத்தின் கீழ் லால்காந்தவுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை என்ன என்று தான் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

சாதாரண பிரஜை ஒருவரோ அல்லது எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரோ இவ்வாறு சட்டத்தை மீறியிருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும், லால்காந்த மதத் துவேஷத்தைப் பரப்பியது மற்றும் மகா சங்கத்தினரை அவமதித்தது குறித்து அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்நாட்டு வரலாற்றில் எந்தவொரு அரசியல்வாதியும் இம்முறையில் மகா சங்கத்தினரை அவமதித்தது இல்லை என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Related posts

தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கபட வேண்டும்!

சட்டப்படி வேலை : அலுவலக ரயில் சேவைகளில் தாமதம்

வீடியோ | ஊடகங்களை முடக்க முற்பட்டால் வீதிக்கு இறங்குவோம் – மரிக்கார் எம்.பி

editor