உள்நாடு

அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் போராட்டம்!

அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரியும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி (செவ்வாய்கிழமை) ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.

இத்தீர்மானம் நேற்று 28ஆம் திகதி நடைபெற்ற அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய Letter no. UGC/HR/2/3/264 dated 03.12.2025 மற்றும் Letter no. UGC/L/40 dated 18.12.2025 எனும் இரண்டு கடிதங்களே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

அண்மையில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்தம் தேவையானதுதான் என்றாலும், அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

அவற்றை திருத்துவதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக, கல்வி அமைச்சரும் பிரதமரும் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய சட்டம் அமுலுக்கு வரும்வரை தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படியே பீடாதிபதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால், இதற்கு முரணாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், பீடாதிபதிகளையும் திணைக்களத் தலைவர்களையும் நியமிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இது சட்டரீதியாக முற்றிலும் தவறானது என ஆசிரியர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல கோரிக்கைகளை அமுல்படுத்துவதில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடர்ந்து அசமந்தப்போக்கை பேணிவருவதாகவும், அதனை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டுமெனவும் இந்த ஒருநாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தின் உப தலைவர் எம். ஏ. எம். சமீம் தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பாக பீடாதிபதி மற்றும் திணைக்களத் தலைவர் நியமனம் தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களை உடனடியாக திரும்பப் பெறாவிடில், தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

-அம்பாறை நிருபர் நூருல் ஹுதா உமர்

Related posts

தேசிய தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியீடு!

இலங்கை அரசாங்கத்திற்க்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இல்லையேல் இனப்பிரச்சனை தீர்க்கப்படாது – சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை

புதிய பதவி ஏற்க வந்தவர் மீது துப்பாக்கி சூடு