அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப வியட்நாம் தூதுவர் உறுதி

அண்மையில் ஏற்பட்ட ‘திட்வா’ (Ditwah) சூறாவளி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களுக்கும், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி. ட்ரின் தி டாம் (Ms. Trinh Thi Tam) அவர்களுக்கும் இடையில் இன்று (16) அமைச்சில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில், அண்மையில் ஏற்பட்ட திட்வா சூறாவளி நிலைமையினால் இலங்கையின் கடற்றொழில் துறைக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தூதுவர் அவர்கள் வியட்நாம் அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் (Climate Change) தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுக்க இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் கலாநிதி ஜினதாச அவர்கள், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அலங்கார மீன் கைத்தொழிலை மீளக்கட்டியெழுப்புவதற்குத் தேவையான உயர்தர இனப்பெருக்க மீன்களை (Broodstock) பெற்றுக்கொள்ள உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்குச் சாதகமாகப் பதிலளித்த தூதுவர், உலக சந்தையில் அலங்கார மீன் கைத்தொழிலில் பெரும் பங்கை வகிக்கும் வியட்நாமின் நவீன தொழில்நுட்ப அறிவையும் ஆதரவையும் வழங்க இணக்கம் தெரிவித்தார்.

மேலும், இறால் பண்ணைத்துறையின் முன்னேற்றத்திற்காக SPF மொனோடான் (SPF Monodon) இறால் குஞ்சு பொரிக்கும் தொழில்நுட்பத்தை (Hatchery techniques) பகிர்ந்துகொள்ளவும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கவும் வியட்நாம் விருப்பம் தெரிவித்தது.

இந்த தொழில்நுட்பப் பரிமாற்றங்களை முறைப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

அரச மட்டத்திலான வேலைத்திட்டங்கள் ஊடாக வியட்நாம் முதலீட்டாளர்களை இலங்கையின் கடற்றொழில் துறையில் இணைத்துக்கொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

விசேடமாக, நோர்த் சீ (North Sea) நிறுவனத்திற்குத் தேவையான ‘டொரே’ நூல் மற்றும் வலைகளை (Toray yarn and twines) இடைத்தரகர்கள் இன்றி நேரடியாகப் பெற்றுக்கொள்வதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வியட்நாமின் விவசாயம் மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் (Ministry of Agriculture and Environment) ஒருங்கிணைந்து இந்த முன்மொழிவுகளை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகத் தூதுவர் அவர்கள் மேலும் உறுதியளித்தார்.

Related posts

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும் எழுச்சி பெறுவோம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

editor

நிந்தவூர் கடல் அரிப்பை தடுக்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம்

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை