நமது நாட்டில் தற்போதுள்ள இடர் முகாமைத்துவ திட்டம் தோல்வி கண்ட திட்டமாக காணப்படுகின்றது. இதனை மாற்றியமைத்து தற்காலத்திற்கேற்றாற் போல் இடர் முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை நமக்கு காணப்படுகின்றன.
இந்த துயரத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இடர் முகாமைத்துவ திட்டம் தொடர்பில் பொதுமக்கள் நம்பிக்கையிழந்து போயுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
டித்வா சூறாவளி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தம்பதெனிய பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் கீழ் தம்பதெனிய ஆதார வைத்தியசாலைக்கு 29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15) இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
Patient Monitor 5 ம், Syringe pump 2 ம் இன்று இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. எதிர்காலத்திலும் மூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் காணப்படும் வைத்தியசாலைக் கட்டமைப்புகளை மீள கட்டியெழுப்பும் முகமாக இவ்வாறான நன்கொடைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துபோயுள்ளன.
அவர்களின் வாழ்வாதாரங்களை மீள கட்டியெழுப்ப நாம் கை கொடுக்க வேண்டும். அவர்கள் தமது வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலரின் முழு வாழ்க்கையுமே அழிந்துபோயுள்ளன. களப் பயணங்களை மேற்கொண்டால் இந்த நிலையை புரிந்து கொள்ள முடியும்.
இளம் குழந்தைகள் முதல் இளம் தலைமுறை வரை அனைவரும் கடுமையான பேரிடரை சந்தித்து, துயரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், நாட்டில் காணப்பட்டு வரும் இடர் முகாமைத்துவ திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய தேவை காணப்படுகின்றன. சீரற்ற வானிலை நிலவரங்களை துல்லியமாக அறிவிப்புச் செய்யும் விதமான பயனுள்ள முன்னெடுப்புகளை நாம் ஆரம்பிக்க வேண்டும்.
நமது நாட்டிற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப டாப்ளர் ரேடார் கருவிகள் இன்னும் இல்லை. சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், இடர் முகாமைத்துவ பொறிமுறையானது தோல்வி கண்டுள்ளன.
இரண்டு வார முன்னறிவிப்புகளுக்குப் பிறகும் சரியாக உரிய நடவடிக்கைகளை வகுத்துச் செயற்படுவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.
இதனால் இலட்சக்கணக்கான மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த துயரத்திலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ளாவிட்டால், நமது குறைபாடுகளைச் சரிசெய்து முன்னேறாவிட்டால், காலநிலை மாற்றங்களை எம்மால் எதிர்கொள்ள முடியாது போகும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இயற்கைப் பேரழிவுகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள முடியாது போகும்.
ஏராளமான உயிர்களை இழக்கும் அபாயம் காணப்படுகின்றன. எனவே, காலாவதியான காலத்திற்கு பொருந்தாத வெறும் பேச்சுக்கும் வெறும் வார்த்தைக்கும் சுருங்கிய இடர் முகாமைத்து சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்.
இந்த இயற்கைச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய புதிய சட்டங்களையும், நிறுவன கட்டமைப்புகளையும் ஒரு நாடாக தாபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முன்னறிவிப்பு, தயார்நிலை, வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில் தெளிவான மாற்றம் ஏற்பட வேண்டும். மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை அரசாங்கம் அறிவித்தது போல உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
காரணங்களைக் கூறுவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தேவை மற்றும் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்துள்ள நேரத்தில், அவசர தீர்வுகளும் நிவாரணங்களும் தேவைப்படுகின்றன.
இச்சமயம் விரைவாகச் செயல்படுவது அரசாங்கத்தின் கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
தற்சமயம் எதிர்க்கட்சி வெறும் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல், மக்களுக்கு சேவை செய்து வருகின்றது.
சுகாதாரம் மற்றும் வைத்தியசாலைக் கட்டமைப்புகளை பலப்படுத்த, உயர் நிலைக்குக் கொண்டு வர பாடுபட்டு வருகின்றது.
பேரிடர்களுக்குப் பிறகு எழும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வைத்தியசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதால், ஐக்கிய மக்கள் சக்தி வைத்தியசாலை கட்டமைப்பை பலப்படுத்தும் உன்னத காரியத்தைச் செய்து வருகிறது.
இந்த நேரத்தில் செய்ய வேண்டிய சிறந்த விடயமாக வைத்தியசாலை கட்டமைப்பை வலுப்படுத்துவது அமைந்து காணப்படுகின்றன. ஆகையால் ஐக்கிய மக்கள் சக்தி இந்தப் பொறுப்பை ஏற்று, மூச்சுத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வைத்தியசாலைக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
