நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில், TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில், வெறும் பொழுதுபோக்கையும் கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் கல்வி நடவடிக்கைகளுக்கும் TikTok சமூக ஊடகத்தை ஒரு டிஜிட்டல் கருவியாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் கல்வி தொடர்பான அறிவை வழங்குவதற்கான வழிமுறைகள், ஆராய்ச்சி, மற்றும் பாடத்திட்டத்திற்குத் தேவையான மாற்றங்களை உள்ளடக்குவதன் முக்கியத்துவம் குறித்து TikTok பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
அத்துடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் TikTok மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கல்வித் துறையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சீர்திருத்தங்களுடன் இத்தகைய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் தெற்காசிய TikTok நிறுவனத்தின் அரசு உறவுகள் தலைவர் மற்றும் தெற்காசிய மக்கள் விவகாரத் தலைவர் ஃபெர்டூஸ் அல் மொட்டகின் (Ferdous Al Mottakin), பிரதமரின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.