நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை (13) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில் நடைபெற உள்ளது.
உயிரிழப்புகள் , தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டிட்வா சூறாவளிஅனர்த்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த தேசிய மீட்பு பொறிமுறையின் விரைவான மற்றும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாட்டின் மீள்கட்டமைப்புத் திட்டத்திற்கு தற்போது மூன்று மூலோபாய அணுகுமுறைகளின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.
அதன்போது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் மீள் ஒழுங்கமைப்பு (Re-purposing) செய்முறையின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களின் நோக்கங்களை மாற்றி செயற்படுத்தல், மறு ஒதுக்கீட்டின் (Re-allocating) கீழ் நிதி முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமான தொகையை ஒதுக்குதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக ரூ. 500 பில்லியன் குறைநிரப்புப் பிரேரணை முன்வைப்பு மற்றும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு, அரச மற்றும் தனியார் நன்கொடையாளர்களின் ஆதரவு பெறப்படும்.
இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் மூலோபாய தலைமைத்துவம், ஒருங்கிணைப்பு, நிறுவன அணுகுமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி அண்மையில் நிறுவினார்.
இதன் மூலம் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மீண்டும் நிறுவுதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களை போதுமான அளவு அதிகரித்தல், உள்நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், டிஜிட்டல் தரவு கட்டமைப்புகள் மற்றும் தீர்மானங்களை எடுப்பதற்கு ஆதரவளிக்கும் பொறிமுறைகளை நிறுவுதல், தொடர்பாடல் மற்றும் பங்குதாரர் உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த வழிகாட்டல், மூலோபாய முடிவெடுத்தல், அமைச்சுகளுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்த்தல், முக்கிய நிதியளித்தல் மற்றும் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பில் முடிவெடுத்தல்களுக்கு வழிகாட்டல் என்பன மேற்கொள்ளப்படும்.
மேலும், பிரதான குழுவின் முடிவுகளை செயல்படுத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, தொடர்புடைய துறைசார் அமைச்சரின் தலைமையில் பின்வரும் உப குழுக்களும் நிறுவப்பட உள்ளன.
அதன்படி,
01.இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதீக, பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த தரவுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான, அனர்த்தத்தின் பின்னரான மதிப்பீட்டுக் குழு.
02.போக்குவரத்து, மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றின் போது வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தரநிலைகளை உறுதிப்படுத்துவதற்கான பொது உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கான குழு.
03.மீளமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல் அல்லது புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான வீட்டு நிர்மாண மீளமைப்பு குழு.
04.வாழ்வாதாரங்கள் மற்றும் வர்த்தகங்களை விரைவாக ஸ்திரப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குதல், பிரதான விநியோகச் சங்கிலிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், நிதிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விருத்தி செய்வதற்கான உள்ளூர் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கான குழு.
05.கல்வி, சுகாதாரம், நீர், சுகாதார பாதுகாப்பு மற்றும் நலன்புரி உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சமூக சேவைகளை மீட்டெடுப்பதை ஒருங்கிணைப்பதற்கான சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பது தொடர்பான குழு.
06.நிதி திரட்டுதல், வரவு செலவுத் திட்டமிடல், நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை அரசாங்கத்தின் நிதிப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்புக்குள் வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்காக நிதி மற்றும் நிதியுதவிக் குழு.
07.அனர்த்த காலத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீளமைப்புத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்மானித்தல், மீளமைப்புத் திட்ட உத்திகளை வழிநடத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான தகவல் கட்டமைப்புகளை நிறுவுவதற்கான தரவு மற்றும் தகவல் கட்டமைப்புகள் தொடர்பான குழு.
08.மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புத் திட்டங்கள் குறித்த மக்கள் தொடர்பாடல், விழிப்புணர்வு மற்றும் பங்குதாரர் தொடர்புகளை ஒருங்கிணைப்பதற்கான மக்கள் தொடர்பாடல் குழு.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
