அட்டாளைச்சேனை 06, 08ஆம் பிரிவு, சின்னப்பாலமுனை மற்றும் உதுமாபுரத்தினை ஊடறுத்துச்செல்லும் OPA வீதி விரைவில் காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
அட்டாளைச்சேனை 06, 08ஆம் பிரிவு, சின்னப்பாலமுனை மற்றும் உதுமாபுரத்தினை ஊடறுத்துச்செல்லும் OPA வீதி ஒரு முக்கியமான வீதியாகும். இந்த வீதியில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் மத்ரசாக்கள் காணப்படுகின்றது.
உள்ளூர், வெளியூரைச் சேர்ந்தோர் என அதிகமானனோர் இவ்வீதியினாலே பிரயாணம் மேற்கொள்கின்றனர்.
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது அரபா வட்டாரத்தில் போட்டியிட்ட நான், அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்ட போது, அப்பகுதி மக்கள் OPA வீதியின் அவலநிலை தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டுவந்து அதனை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வீதி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் போது OPA வீதிக்கு முன்னுரிமையளித்து புனரமைப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அப்போது உறுதியளித்திருந்தேன்.
அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தித் திட்டத்தில் குறித்த வீதியும் உள்வாங்கப்பட்டு காபட் வீதியாக புனரமைப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மேலும் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அத்துடன் மேலும் பல அபிவிருத்திப் பணிகளை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
தற்பொழுது எமது நாட்டுக்கு அச்சுறுத்தலாக காணப்படும் போதைப்பொருளினை ஒழிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
நாட்டின் நாலாபுறங்களிலும் தினமும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
அரசாங்கம் முன்னெடுக்கும் குறித்த வேலைத்திட்டத்திற்கு அட்டாளைச்சேனை பிரதேச மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எமது பிரதேசத்திலுள்ள இளைஞர்களையும் இதிலிருந்து பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது என்றார்.
