“அம்பாரை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் கட்சியை அழிவுப்பாதையினை நோக்கி கொண்டு செல்கின்றது…”
தேசிய மக்கள் சக்தியில் நம்பிக்கை இழந்த சிறுபான்மை மக்கள் மீண்டும் சிறுபான்மை இனவாத கட்சிகளை நோக்கி திரும்பிச் செல்கின்றனர்.
நான் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் போட்டியிட்டு 27058 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தேன்.
இதனால் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 33.19% வாக்குகள் பெற்று தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றி பெறவும் காரணமாக இருந்தேன்.
இதன் மூலம் எமது கட்சியானது அம்பாரை மாவட்டத்தில் 4 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெற பாரிய பங்களிப்பினைச் செய்திருந்தேன்.
ஆனாலும் துரதிஷ்டவசமாக சம்மாந்துறை தொகுதி வெற்றி பெற்றிருந்த போதும் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் போதிய விருப்பு வாக்குகளை பெற்றிருக்கவில்லை ( சதிகள் அம்பலமாகும்).
இதனால் எமது கட்சி சிறுபான்மை மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்கின்ற உயர்வான எண்ணத்தில் கல்முனை தொகுதியில் இருந்து போட்டியிட்டு சுமார் 23000 விருப்பு வாக்குகள் பெற்ற தோழர் ஆதம்பாவா அவர்களுக்கு தேசிய பட்டியல் வழங்கி இருந்தது.
எனினும் இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட குழுவில் எதுவித கலந்துரையாடலும் நிகழ்த்தப்பட்டிருக்கவில்லை.
(சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் இரகசியமாக ஆதம்பாவாவின் அணியோடு சென்று தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு ஆதம்பாவா தான் பொருத்தம் என வாதிட்டார் எனத் தகவல் உள்ளது)
ஆனால் கட்சி அதன் வளர்ச்சிக்காக எடுக்கின்ற எந்த ஒரு முடிவுக்கும் கட்டுப்பட்டவனாக நான் செயல்பட்டு வந்தேன்.
எனினும் சம்மாந்துறை மக்கள் பெரும்பான்மையான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கும் எனக்கும் வழங்கிய போதிலும் சம்மாந்துறை தொகுதியில் எந்த ஒரு கட்சி சார்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படாமையால் கட்சியையும் என்னையும் நம்பி வாக்களித்த மக்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை இழந்ததுடன் அரசியல் அநாதையாக்கப்பட்டனர்.
இன்நிலையில் ஜனாதிபதி தோழர் அனுராதிசநாயக்க அவர்களும் கடந்த பிரதேச சபை தேர்தல் காலத்தில் சம்மாந்துறை பிரச்சார மேடையில் ஏறி “சம்மாந்துறை மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்து கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறை தொகுதியினை வெற்றிபெறச் செய்தமைக்காக தோழர் ஆதம்பாவா அவர்களுக்கு தேசிய பட்டியல் வழங்கியதாக” கூறியிருந்தார்.
இந்த உரையானது சம்மாந்துறை மக்கள் மத்தியில் கட்சி தொடர்பான நம்பிக்கைியீனத்தை ஏற்படுத்தி இருந்ததுடன் கட்சியின் படுதோல்விக்கும் காரணமானது.
இதனால் தோழர் அனுரதிசாநாயக்கா அவர்கள் ஒரு ஜனாதிபதியாக வந்து பிரச்சாரம் செய்திருந்த போதிலும் கூட சம்மாந்துறை மக்கள் கடந்த பிரதேச சபை தேர்தலில் அவரையும் கட்சியையும் நிராகரித்திருந்தனர்.
ஏனெனில் சம்மாந்துறையில் இருந்து போட்டியிட்டு 27058 வாக்குகளை பெற்ற நான் இருக்கின்ற போது கல்முனையில் இருந்து 23000 வாக்குகளைப் பெற்ற தோழர் ஆதம்பாவாவுக்கு தேசியப் பட்டியலை வழங்கியமைக்கான நியாயம் மக்கள் மத்தியில் தெளிவாக கூறப்பட்டிருக்கவில்லை.
இதனால் சம்மாந்துறை மக்கள் மத்தியில் தோழர் ஆதம்பாவாவிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு நான் தேசியப்பட்டியல் நியமனத்தை விட்டுக் கொடுத்ததாக கதை பரப்பப்பட்டு எனக்கு அபகீர்த்தி உருவாக்கப்பட்டது.
மேலும் தோழர் ஆதம்பாவா அவர்களினால் “தேர்தலில் தோல்வியடைந்தாலும் அவருக்கு தேசிய பட்டியல் வழங்கப்படும்” என ஏற்கனவே ஜனாதிபதியினால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது என நியாயம் கூறப்பட்டது.
அது மாத்திரமல்ல ஜனாதிபதி தோழர் அனுர திசாநாயக்கா அவர்கள் ஆதம்பாவாவின் பல்கலைக்கழக வகுப்பு தோழன் அதனால் அவருக்கு தேசிய பட்டியல் தந்து அழகு பார்த்தார் எனவும் தோழர் ஆதம்பாவா சார்பானவர்களினால் ஆங்காங்கே கூறி வந்ததன் விளைவாக தேசிய மக்கள் சக்தியை ஒரு நியாயமான கட்சி அல்ல என சம்மாந்துறை மக்கள் முத்திரை குத்தியதுடன், கட்சியின் தீர்மானத்தை நியாயப்படுத்த பல வழிகளிலும் முயன்ற என் மீதும் கட்சியின் மீதும் அதிருப்திஅடைந்தனர்.
இதனால் கடந்த பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சம்மாந்துறை பிரதேச சபையில் படுதோல்வி அடைந்தது.
இவ்வாறான சூழலில்
புதிதாக NPP இன் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தோழர் நபாஸ் அவர்கள்
“கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சம்மாந்துறை சார்பில் போட்டியிட்ட ரிஷாட் புகாரி அவர்களின் ஒழுங்கீனமான நடத்தை காரணமாக தேசிய மக்கள் சக்தியானது சம்மாந்துறைக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கவில்லை”
என சம்மாந்துறை பிரதேச சபையில் அவரது கன்னி உரையில் கூறி பிரதேச சபை ஹன்சாட்டிலும் பதிய முற்பட்டுள்ளார் என அறியக்கிடைத்தது.
எனவேதான் நான் கட்சியிடம் கூறுவது என் மீதான ஏதேனும் மோசடிகள், ஊழல்கள் காணப்படுமாக இருந்தால் அல்லது எனது தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது சமூக வாழ்க்கையில் ஏதாவது ஒழுக்கமற்ற நடத்தை காணப்படுமாக இருந்தால் தயவு செய்து உங்களுடைய அதிகாரத்தை கொண்டு முறையான விசாரணை நடத்தி என்னை தண்டிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏனெனில் இவ்வாறான கருத்துக்கள் கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக எனக்கு எதிராக பரப்பப்பட்டிருந்தது.
இதன் பின்னனியில் குறித்த பிரதேச சபை உறுப்பினர்தான் உள்ளார் என்கின்ற நியாயமான சந்தேகம் எனக்கு உள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து கட்சிகள் சார்பிலான சிறுபான்மை வேட்பாளர்களிலும் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற ஒரு வேட்பாளராக நான் இருந்த போதிலும் நான் ஒருபோதும் கட்சியிடம் எந்த ஒரு பதவியையும் அல்லது அதிகாரத்தையோ இதுவரை கேட்டதில்லை.
கட்சியினுடைய வளர்சியை கருத்தில் கொண்டு, கட்சி எடுத்த அனைத்து விதமான முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு, இன்றுவரை சம்மாந்துறை மக்களினால் கூறப்படும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழப்பதற்கு நான் தான் காரணம் என்கின்ற பழியையும் ஏற்றுக் கொண்டு, கட்சிக்காக பணியாற்றி வருகின்றேன் (சதிகளை மக்களுக்கு இதுவரை கூறாமல்).
இந்நிலையில் கட்சியினுடைய பிரதேச சபை உறுப்பினர் என் மீது படு மோசமான பழியினை போட்டு எனது சாதாரண சமூக வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது மிகவும் மன வேதனையளிக்கின்றது.
இதனால் இனியும் என்னால் பொறுமை காக்க முடியாது.
உண்மையில் மாவட்ட குழுவில் கூட ஆலோசிக்காமல் வழங்கப் பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களே சம்மாந்துறை மக்களுக்கு நியாயம் கூற வேண்டியவர்.
ஆனால் அவரும் கட்சியும் இதுவரை ஆதம்பாவாவின் ஒருதலைப்பட்சமான நியமனம் தொடர்பில் நியாயம் எதுவும் கூறாத நிலையில், இன்று எனது ஒழுங்கீனமான நடத்தையினால் எனக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை என சம்மாந்துறை பிரதேச சபையில் ஹன்சாட் குறிப்பில் பதிய முயற்சிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
உண்மையில் ஆதம்பாவாவின் ஒரு தலைப்பட்சமான தேசியப்பட்டியல் நியமனம் அம்பாரை மாவட்டத்தில் மாத்திரமால்ல முழு நாட்டிலும் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியை ஒரு நியாயமற்ற சர்வாதிகார சக்தியாக காண்பித்திருப்பதுடன் கேலிக்கூத்தாகவும் மாற்றியுள்ளது.
உங்களுக்குத் தெரியும்
எனது தந்தையார் புஹாரி அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட கால செயற்பாட்டாளர்.
அவர் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கட்சியின் ஒரு கடைநிலை ஊழியனாக கட்சியின் வளர்ச்சிக்காக பங்களிப்புச் செய்து வந்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில்கூட 10, 50, 100, 150 என வாக்குகள் பெற்று ஒருபோதும் இந்தக் கட்சி ஆட்சிக்கு வராது என பலரும் கூறிவந்த காலத்தில்
அம்பரை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் SLMC அஷ்ரப் – ஹக்கீம் ACMC றிசாட் NC அதாவுள்ளா என அரசாங்கத்தின் பலம் மிக்க அமைச்சர்கள் இருந்த போதிலும் அவர்களின் பங்காளியாக இருந்து சுகபோசம் அனுபவிக்க நாங்கள் ஒரு போதும் விரும்பியிருக்காமல் JVP இன் வளர்ச்சியில் எங்களது உடல், பொருள் அத்தனையையும் தியாகம் செய்து பங்களிப்புச் செய்து வந்துள்ளோம்.
இதனாலேயே மக்கள் விடுதலை முன்னணி மீதான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் எனது பிறப்பு முதல் வளர்த்தெடுக்கப் பட்டது அது எனது மரணம் வரை தொடரும்.
அன்று தனி ஒரு நபராக எனது தந்தையார் JVP இன் வளர்ச்சிக்காக அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் தன்னை அர்ப்பணித்து வந்த போதிலும்,
அனுர அலை அடித்த பின்னர் வந்த NPP எனும் இன்றைய சந்தர்ப்ப வாதிகளினால் என்னோடு சேர்ந்து எனது தந்தையாரையும் வீண் பழிகள் மூலம் கட்சியை விட்டும் ஓரம் கட்ட முயற்சிப்பது யாவருக்கும் ஆச்சரியம் மிகுந்தது.
இன்றும் கூட ஆட்சி அதிகாரத்தை சுயநலனுக்காக அனுபவிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லாமையால் நாங்கள் அரசியலை விட்டும் ஒதுங்கி வாழ்ந்து வருகின்றோம்.
இன் நிலையில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா மற்றும் அவரது ஆதரவாளர்களினால் தொடர்ந்தும் என் மீதும் எனது தந்தையார் மீதும் கேவலமான அவதூறுகள் பரப்பப்படுவது வேதனைக்குரியது,
இலவச பாராளுமன்ற உறுப்பினர் மூலமும், அவரது ஆதரவாளர்களான புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மூலமும் எம்மீது அபாண்டங்களைச் சுமத்த வேண்டாம் என தயவாக வேண்டிக் கொள்கின்றேன்.
இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் எம்மோடு ஊடுருவியுள்ள சில நபர்களின் சந்தர்ப்பவாத முகமும், அவர்களின் தனிப்பட்ட நடத்தையும் அம்பாரை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியை விட்டும் மக்களை தூரப்படுத்திவிட்டது.
இந்த நிலை தொடரும் போது தோழர் அனுரவும் மக்களை விட்டும் விரைவில் தூரப் படுத்தப்படுவார்.
இறுதியில் கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தங்களில் தேசிய மக்கள் சக்தியினை ஆதரித்த மக்கள் இன்று மீண்டும் இனரீதியான கட்சிகளின் பின்னால் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
-ரமீஸ் எம் லெவ்வை