கடந்த காலங்களில் எதிர்க்கட்சில் இருந்து கொண்டு பல பணிகளை முன்னெடுத்தேன். பிரபஞ்சம் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு கணினிகள், ஸ்மார்ட் திறைகள் மற்றும் பிரிண்டர்களை நன்கொடையாக வழங்கினேன். அச்சமயங்களில் ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை விருத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தேன். இவ்வாறான பணிகளை நாட்டுக்கு முன்வைத்த போது அரசியல் ரீதியான தாக்குதல்களைக் கூட நான் எதிர்கொண்டேன். ஆங்கில மொழி அறிவை விருத்தி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, ஸ்மார்ட் கல்வி குறித்து பேசிய போது, பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பேசியபோது நான் கேலி செய்யப்பட்டேன். முட்டாள்தனமான பேச்சு என்றும் நான் அவமானப்படுத்தப்பட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உண்மை ஒருநாள் வெல்லும். அண்மையில் நான் கூறிய கதைகளின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டிருப்பர். ஆங்கிலத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக யாரையும் ஒருபோதும் நான் கேலி செய்ய மாட்டேன். மாறிவரும் உலகத்திற்கு ஏற்பப் பொருந்தாத, காலாவதியான கல்வி முறையே ஆங்கில மொழியின் தவறான பயன்பாட்டிற்குக் காரணமாகும். எனவே, நாம் இப்போதாவது உண்மையைப் புரிந்துகொண்டு, சர்வதேச சமூகத்தின் முன் கோமாளிகளாக மாறுவதற்குப் பதிலாக, இந்த நாட்டின் பிள்ளைகளுக்கும், தற்போதைய தலைமுறையினருக்கும் நீதியை உறுதிசெய்ய கல்வி முறையில் தெளிவான மாற்றத்தைக் கொண்டு வந்து, ஆங்கில வழிக் கல்வியை நோக்கி நகர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆங்கில மொழிக் கல்விக்கான உரிமை செல்வந்த குடும்பங்களுக்கு மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும். இது ஒரு அடிப்படை உரிமையும், மனித உரிமையுமாக அமைந்து காணப்படுகின்றது. ஆகவே, என்மீது எவ்வளவு தான் சேறு பூசப்பட்டாலும் இன்று உண்மை வெளிப்பட்டுவிட்டது. அண்மையில் சர்வதேச மாநாட்டில் நடந்ததைக் கருத்தில் கொண்டு, இந்த குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது ஆட்சியாளர்களர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகிய இரு சாராரினதும் பொறுப்பாகும்.
இதற்கான பணிகளை முன்னெடுங்கள். சகல அரச பாடசாலைகளிலும் ஆங்கில வழிக் கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இதற்குத் தேவையான சகல ஆதரவையும் வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அம்பாறை, உஹன, கோனகல ஸ்ரீ சுமங்கலராம விகாரையில் கயன் தர்ஷன அவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சைத்திய திறப்பு விழாவில் இன்று (2) கலந்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
🟩 அறநெறிக் கல்வியைப் போலவே, விகாரைகள் மதஸ்தலங்கள் ஊடாக தகவல் தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு அறநெறிப் பாடசாலைகள் மூலம் நீதியான, நாகரிகமான, சட்டத்தை மதிக்கும் நற்பண்புகளை போதிக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு அறநெறிப் பாடசாலைகள் மூலம் வழங்கப்படும் அறநெறிக் கல்வியை வலுப்படுத்த வேண்டும். காலத்துக்கு ஏற்றாற் போல் இதன் போதனைகள் அமைய வேண்டும். விகாரைகள் சக சமய மத வழிபாட்டு தலங்கள் அந்தந்த மதங்களை வலுப்படுத்தும் மையங்களாக மட்டுமல்லாமலாது, நமது நாட்டின் சிறார்கள், பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு காலத்திற்கு ஏற்ற புதிய கல்விக்கு வழிகாட்டும் மையங்களாகவும் மாற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உலகம் ஒரு விரைவான தொழில்நுட்பப் புரட்சியைக் கண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமது நாடு அதன் காலாவதியான கல்வி முறையால் இன்னும் தேக்க நிலையில் இருக்கும் இந்த நேரத்தில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள விகாரைகள் ஏனைய மதவழிபாட்டுத் தலங்கள் புதிய தொழில்நுட்ப அறிவை போதிக்கும், அதன் பால் வழிகாட்டும் மையங்களாக அமைந்து காணப்பட வேண்டும். இதனூடாக சர்வதேச தொழிலாளர் சந்தைக்குப் பொருத்தமான புதிய அறிவையும், கல்வியையும், வழிகளையும் போதிக்கும் நிலையங்களாக மாற வேண்டும். நகரத்தில் உள்ள கோடீஸ்வர குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்தப் புதிய தொழில்நுட்பக் கல்வியை, கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் வழங்க முடியும். இந்த உரிமையை யாவருக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும். கல்வியின் இந்த புதிய போக்குகளை யாவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். கல்வியில் ஏற்றத்தாழ்வு காட்ட முடியாது. இது அடிப்படை உரிமை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விகாரைகள் மூலம் தர்மம் கிராமங்கள் மற்றும் நகரங்கள் முழுவதும் பரவுகின்றன. விகாரைக் கட்டமைப்பை வலுப்படுத்தும், மத மேம்பாட்டுத் திட்டங்கள் பௌத்த மதத்தின் முன்னேற்றம் குறித்து பேச்சுக்களில் இருப்பது போலவே அது நமது நாளாந்த செயல்கள் மூலமாகவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
🟩 விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வையுங்கள்.
விவசாயிகளுக்கு உயர்தரத்திலான விதைகள் மற்றும் உரங்கள் கிடைத்தபாடில்லை. அரசாங்கத்திடமிருந்து வரும் சொற்ப நிவாரணம் விவசாயம் நடவடிக்கைகள் முடிந்த பின்னரே கிடைத்து வருகிறது. தற்போதைய ஆளும் தரப்பினர், எதிர்க்கட்சியில் இருக்கும்போது, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்றும், பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நிலையான விலை வழங்கப்படும் என்றும் கூறினர். இவற்றை செயல்படுத்துவதற்கான காலம் வந்துள்ளது. சொன்னதைச் செய்யவும் இதுவே சரியான நேரம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 IMF இன் நான்காவது தவணையைப் பெறவே எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன.
எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவே IMF இன் நான்காவது தவணை கிடைக்கப்பெற்றது. முந்தைய அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை திருத்தியமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது, ஆனால் புதிய அரசாங்கத்தால் இதில் எந்த திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் மீது தேவையற்ற சுமையை சுமத்தாமல் ஒப்பந்தத்தை மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையைப் பெறுவதற்கே எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
🟩 இன்று அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றன.
தற்போது வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை. தட்டுப்பாடு நிலவுகின்றன. ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் மருந்துப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தக் குறைபாடுகளுடன் இலவச சுகாதாரத்தைப் பராமரித்துச் செல்வது சாத்தியமற்றது என வைத்தியர்கள் கூறுகின்றனர். பாராளுமன்றத்தில் இது குறித்துப் பேசும்போது, பொய் சொல்ல வேண்டாம் என்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் கூறி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 மக்களைக் கொல்வதற்காக ஆட்சியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை.
மக்களைக் கொல்வதை விடுத்து, அவர்களை உயிருடன் பாதுகாக்கவே ஆட்சியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சொல்வதைச் செய்யும் அரசாங்கத்தையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதனால் சொன்னதைச் செய்யுமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.