திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
குறித்த உத்தரவானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இன்று (30) அறிவிக்கப்படவிருந்தது.
எனினும், இந்த வழக்குத் தொடர்பான உத்தரவு தயாராக இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் அறிவித்தார்.
அதற்கமைய, இந்த உத்தரவு எதிர்வரும் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக இந்த உத்தரவைத் தயார் செய்ய முடியுமாயின் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு நிகழுமாயின் அது குறித்து தரப்பினருக்கு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
