சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு–கல்முனை அதி சொகுசு பேரூந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான குடும்பஸ்தர் பயணப் பை ஒன்றில் சூட்சுமமாக கொண்டு வந்திருந்த 4 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் கைதானார்.
குறித்த சந்தேக நபர் கொண்டு வந்த போதைப்பொருட்களில் குஷ், கேரளா கஞ்சா, ஐஸ் ,ஹெரோயின், உட்பட 4 வகையான போதைப்பொருட்கள், 2 தொலைபேசிகள் ஒரு தொகை பணம் மா டின் என்பன நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ண உட்பட பொலிஸ் சார்ஜெண்டுகளான ஏ.எல்.எம் தௌபீக் (2223) திலகரட்ண (37163) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மேலம் இச்சம்பவத்தில் கைதான சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது சுமார் 20 முதல் 30 வரையிலான 6 போதைப்பொருள் சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக சம்மாந்துறை உட்பட ஏனைய பொலிஸ் நிலைய பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
இந் நடவடிக்கையில் கைதான 6 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
மேலும் குறித்த சோதனை நடவடிக்iயில் பெறுமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமையை தொடர்ந்து கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் உட்பட நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ண உட்பட பொலிஸ் சார்ஜெண்டுகளான ஏ.எல்.எம் தௌபீக் ( 2223) திலகரட்ண(37163) உட்பட இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இதர பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டியதுடன் போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் குறித்தும் ஆலோசனை வழங்கி சென்றார்.
மேலும் கைதான பிரதான சந்தேக நபரை இன்று(30) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இது தவிர பெரிய நீலாவணை பொலிஸாரின் கொழும்பு–கல்முனை பஸ்ஸின் அதிரடியான சோதனை தொடக்கம் சம்மாந்துறை வரையான கைது நடவடிக்கையினால் போதைப்பொருள் வலையமைப்பு பிடிக்கப்பட்டு பல்வேறு வகையிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்
