கல்விச் சீர்திருத்தங்களுக்குச் சமாந்தரமாகத் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும், தரமான பயிற்சி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் அதிகபட்ச கவனம் செலுத்தப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்ற தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் வருடாந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் தொழில் சந்தைக்குத் தேவையான தரமான தொழில் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்குரிய வகையில், நாடளாவிய ரீதியிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஊடாக NVQ 5 மற்றும் NVQ 6 தரங்களை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
அங்குத் தொடர்ந்து உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் தொழில்நுட்பக் கல்விக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு உண்டு.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொழில்நுட்பக் கல்லூரி வலையமைப்பு ஆற்றும் பணியை நாம் பாராட்டுகிறோம்.
உலகம் மாறும் வேகத்துடன் உருவாகும் எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதற்குத் திறன்களைத் தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தையும் விருப்பத்தையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதுடன், தொழிற்பயிற்சி நிறுவனமொன்றிலிருந்து கிடைக்கும் மிக முக்கியமான சொத்து ‘கற்றுக்கொள்ளும் முறையைக்’ கற்றுக்கொள்வதாகும்.
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் தலைமைத்துவம் வழங்கும் பங்காளர்களாக, டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நீங்கள், நாட்டிற்கும் உலகிற்கும் பயனுள்ள பிரஜைகளாகத் திகழ்வீர்கள் எனத் தான் நம்புவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
