அணுவாயுதம் தொடர்பான இரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சீனாவின் உயர்மட்ட இராணுவ தளபதியொருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீன இராணுவத்தின் செயற்பாட்டுத் தலைவராக விளங்கும் 75 வயதான ஜெனரல் ஜாங் யூசியா இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வௌியிட்டுள்ளது.
சீனாவின் அணுவாயுதத் தரவை வொஷிங்டனுக்கு வழங்கி கசிய விட்டதன் ஊடாக கடுமையான ஒழுக்க மீறலுக்கு அவர் உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்தோடு சிரேஷ்ட அதிகாரியொருவரை பாதுகாப்பு அமைச்சராக பதவி உயர்த்தவும் அரசியல் குழுக்களை உருவாக்கவும் இலஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது மேலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயங்கள் குறித்து ஜெனரல் ஜாங் விசாரணையொன்றை எதிர்கொண்டுள்ளதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
இதேவேளை பொதுமக்கள் மற்றும் இராணுவ அணுசக்தி திட்டங்களை மேற்பார்வையிடும் சீன தேசிய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் கு ஜுன், ஜெனரலுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1979 இல் வியட்நாமுடனான சீனாவின் குறுகிய காலப் போரில் பங்குபற்றி நேரடி அனுபவம் பெற்ற சில தளபதிகளில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.
-த டெலிகிராப்
