அரசியல்உள்நாடு

பிரியாவிடை பெறும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ், இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை மரியாதையின் நிமித்தம் அண்மையில் (22) சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, தனது பதவிக்காலத்தில் அவருக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் சபாநாயகர் வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக உயர் ஸ்தானிகர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததுடன், தனது பதவிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து சபாநாயகரிடம் விளக்கினார்.

மக்களின் நலனுக்காகவும், அண்மைய பொருளாதார சவால்களிலிருந்து மீள்வதற்காகவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் பாராட்டியதுடன், எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பாகிஸ்தானின் உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகர் இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உயர் ஸ்தானிகர் மேற்கொண்ட முயற்சிகளை சபாநாயகர் பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை நினைவு கூர்ந்த சபாநாயகர், தேவையான தருணங்களில் குறிப்பாக சர்வதேச அரங்குகளில் மற்றும் 30 ஆண்டு கால யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஆதரவிற்காக இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், புலமைப்பரிசில் திட்டங்கள் ஊடாக உயர்கல்வி, விவசாய ஒத்துழைப்பு மற்றும் கால்நடைத் தொழில் தொடர்பான தொழில்நுட்பப் பகிர்வு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகள் மற்றும் உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

நாமலுக்கு எதிராக நான் முறைப்பாடளிக்கவில்லை – அமைச்சர் பந்துல.

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல்

editor