அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை மேற்கொள்வதைத் தவிர்த்து, அனைத்துப் பிள்ளைகளினதும் மகிழ்ச்சிக்காக முடிவுகளை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று (17) புத்தளம் சாஹிரா முஸ்லிம் கல்லூரிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, அப் பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் பிரதமர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
பாடசாலையில் உயர்தர விஞ்ஞானப் பாடத்துறையை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அதிபர் முன்வைத்த கருத்துக்களுக்குப் பதிலளித்த பிரதமர்:
விஞ்ஞானப் பாடம் மாத்திரமன்றி, ஏனைய அனைத்துப் பாடங்கள் தொடர்பிலும் பிள்ளைகளுக்கு அறிவை வழங்க வேண்டும். அதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
பிளவுகளைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.
மேலும், பிள்ளைகளுக்காகச் சிறந்தவற்றையே செய்ய வேண்டும் எனவும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த யோசனைகளை பாடசாலை மட்டத்தில் கூட்டாகக் கலந்துரையாடித் தனக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
பாடசாலைகளாகப் பிரிந்து நின்று பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்க முடியாது எனவும், எப்போதும் பிள்ளைகளின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். ஆனால், தற்போது நம்மிடம் ஒரு சிறந்த நிகழ்காலம் உள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களைத் தவிர்த்து, ஒட்டுமொத்த பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக முடிவெடுக்க நாம் பழக வேண்டும்” என பிரதமர் குறிப்பிட்டார்.
