முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
கடந்த ‘அரகலய’ போராட்ட காலத்தின் போது, 2022 மே 9 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்ததுடன், இக்கொலைகள் தொடர்பில் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் 42 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பின்னர், 2023 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் திகதி, இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 37 சந்தேக நபர்கள் கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதிவாதிகளைப் பிணையில் விடுவிக்க கம்பஹா மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் எடுத்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு 2024 பெப்ரவரி 12 ஆம் திகதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
