உலகம்

ஈரானில் போராட்டங்களைத் தொடருங்கள், உதவி வருகிறது – ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

ஈரானில் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர்களுக்கு உதவிகள் கிடைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த உதவி என்பது அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படக்கூடிய ஒரு நடவடிக்கையைக் குறிக்கிறதா என்பது பற்றி அவர் தெளிவுபடுத்தவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப் தனது ‘Truth Social’ கணக்கில் இட்டுள்ள பதிவில், “ஈரானிய தேசபக்தர்களே, போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுங்கள் – உங்கள் நிறுவனங்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்!!! … உதவி கிடைத்துக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், ஈரானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கையாக இராணுவ நடவடிக்கையையும் கருத்தில் கொள்ளப்படும் மாற்று வழிகளில் ஒன்றாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

பல வருடங்களுக்குப் பின்னர் ஈரானில் மிகக்கடுமையான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

ஈரான் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதற்கமைய, இப்போராட்டங்கள் காரணமாகப் பாதுகாப்புப் படையினர் உட்பட 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு நாட்டின் தயாரிப்புகளுக்கும் 25 சதவீத இறக்குமதி வரியை விதிக்கத் தீர்மானித்துள்ளதாக நேற்று இரவு ட்ரம்ப் அறிவித்தார்.

ஈரான் உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

 இன்று ஐ பி எல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன

அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை

பிரித்தானியா பிரதமருக்கும் கொரோனா வைரஸ் தொற்று