பேரிடரில் சிக்கி வீடிழந்த மலையக மக்களுக்கு, நாட்டின் ஏனைய மக்களுக்கு தர படுவதை போல, காணியும், 50 இலட்ச ரூபாவும் தரப்பட வேண்டும்.
கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு அடிப்பதை போல், இந்திய வீடமைப்பு திட்டத்தை, இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு தீர்வாக தர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று சபையில் உரையாற்றுகையில் மனோ எம்பி மேலும் கூறியது;
இந்திய வீடமைப்பு திட்ட நிதியை சாதாரண காலத்து மலையக வீடமைப்புக்கு பயன் படுத்துங்கள். இது பேரிடர் வீடமைப்பு. இதில் எமது மக்களை மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்த வேண்டாம்.
நாமும் இல்ங்கை பிரஜைகள். நாம் இரண்டாம் தர பிரஜைகள் இல்லை. எல்லோரையும், போல் எமக்கும் காணியும், விடமைக்க 50இலட்சமும் ஒதுக்க பட வேண்டும்.
அதேவேளை, மாடி வீட்டு திட்டம் மலையகத்தில் வேண்டாம். அதை நகரங்களில் செய்யுங்கள். எமக்கு காணியுடன், நில தொடர்பு வேண்டும். அப்போதுதான், நாம் ஒரு இனமாக இலங்கையில் வாழ முடியும்.
தொடர் மாடி வீட்டு யோசனையை அரசாங்கத்தில் சிலர் இரகசியமாக முன் வைக்கிறார்கள்.
இது, நிலத்துடன் தொடர்பு பெற்று, ஒரூ இனமாக, எமது மக்கள் வாழ வேண்டும் என்ற எமது கொள்கைக்கு எதிரான சதி முயற்சி.
இலங்கை பேரிடர் மீள்-கட்டெழுப்பல் வீடமைப்பு திட்டத்தை ஜனாதிபதி இன்று, அனுராதபுரத்தில் ஆரம்பிக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.
இந்த வீடமைப்பு திட்டத்தில் மக்களுக்கு காணி வழங்கி, வீடமைக்க ரூ. 50 இலட்சம் கட்டம், கட்டமாக வழங்க படுகிறது. இதேபோல், ஜனாதிபதி பல கொடுப்பனவுகளை அறிவித்தார்.
வீடு துப்புறவு செய்ய, 25,000 ரூபா, பாடசாலை பிள்ளைகளுக்கு 15,000 ரூபா, மற்றும் கால்நடைகள், காய்கறி தோட்டங்கள், சிறு கடைகள் அழிந்து போயிருந்தால், கொடுப்பனவுகள் தர படுகின்றன. இறுதியாக, இந்த காணியும், ஐம்பது இலட்சமும் அறிவிக்க பட்டுள்ளன.
இந்த அரசாங்க உதவி திட்டங்களில் பெருந்தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் மக்களுக்கான இடம் எங்கே என ஜனாதிபதி அனுர குமார விடம் நான் இந்த சபையில் இருந்து கேள்வி எழுப்புகிறேன்.
ஜனாதிபதி அறிவிக்கிற திட்ட நிவாரணங்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், கிராம சேவகர், NBRO அதிகாரிகள், ஆகியோர் ஊடாக எமது மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை ஜனாதிபதி அறிவாரா?
ஜனாதிபதி மீது எமக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதை அவர் நீர்த்து போக விட விடக்கூடாது. இப்போது அவர் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது.
ஆகவே, இனிமேலும் அவகாசம் கோர முடியாது. நாம் தொடர்ந்தும் பொறுமையாக இருக்க முடியாது.
இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களுக்கு நான் நேற்று கடிதம் எழுதி, இந்திய வீடமைப்பு திட்டத்தை, பேரிடர் நிவாரண வீட்டு திட்டத்துக்கு பதிலீடாக்க இடம் தர வேண்டாம் என கோரியுள்ளேன். அது வேறு. இது வேறு.
இந்திய வீடமைப்பு திட்டத்தை பிரதமர் மோடி எமது கோரிக்கையை ஏற்று தந்தது, சாதாரண காலத்து, வீடமைப்புகளுக்கு ஆகும்.
ஆகவே, நாடு முழுக்க அனைத்து மக்களுக்கும் வழங்க படும் பேரிடர் வீடமைப்பு நிவாரணம், எமது மக்களுக்கு குறைக்க படுவதை நாம் ஏற்க மாடாடோம்!
இந்திய வீடமைப்பு திட்டத்தை, பேரிடர் விடமைப்புக்கான தீர்வாக நாம் ஏற்க மாட்டோம்!
மலைநாட்டில் தனி வீட்டு திட்டத்தை மறுத்து, எமது மக்களுக்கு நிலத்துடனான தொடர்பை மறுக்கும் தொடர்மாடி வீட்டு திட்ட சதியை நாம் ஏற்க மாட்டோம்!
வீடியோ
