மூதூரில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வரும் சந்தையில் வியாபாரிகள் சிலர் சுகாதார விதிமுறைகளை மீறி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.எம். கசாலி தலைமையிலான பரிசோதனை குழு நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனையை மேற்கொண்டது.
இதன்போது, சந்தையில் சுகாதார நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுகாதார விதிமுறைகளை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து மரக்கறி,1500கிலோ வெங்காயம் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மூதூர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது மேலும் சில சுகாதாரமற்ற உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னரும், சுகாதார விதிமுறைகள் மீறப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், வியாபாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டிருந்தன. அவற்றையும் மீறி செயல்பட்ட வியாபாரிகள் மீது தான் இம்முறை கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
