‘டித்வா’ (Ditva) புயலினைத் தொடர்ந்து, கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (Korea Eximbank), கொரிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இலங்கைக்கு 50,000 அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னர் உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கியு-ஹ்வாங் லீ (Kyu-Hwang Lee), ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு தனது சோகத்தை வௌிப்படுத்தியுள்ளார்.
இதன்போது, இலங்கை அரசாங்கத்துடனான நீண்டகால பங்காளித்துவத்தை எக்சிம் வங்கி பெரிதும் மதிப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய பொது வசதிகளை மீளமைப்பதற்கும், தற்போது தற்காலிக தங்குமிடங்களில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கையுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரிய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் இந்தப் பங்களிப்புடன் சேர்த்து, கொரிய குடியரசினால் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த மனிதாபிமான உதவியின் அளவு 550,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
